2.19 கோடி குடும்ப அட்டைதாரர்களுக்கும் பொங்கல் பரிசு தொகுப்பு தடையின்றி கிடைக்கும்: கூட்டுறவுத்துறை அமைச்சர் பெரியகருப்பன் உறுதி

சென்னை: தமிழகம் முழுவதும் உள்ள 2.19 கோடி குடும்ப அட்டைதாரர்களுக்கு பொங்கல் பரிசு தொகுப்பு தங்கு தடையின்றி விநியோகம் செய்யப்படும் என அமைச்சர் பெரியகருப்பன் தெரிவித்துள்ளார்.  சென்னை, சேத்துப்பட்டில் உள்ள தமிழ்நாடு கூட்டுறவு ஒன்றிய அலுவலக கூட்ட அரங்கில், கூட்டுறவுத்துறை அமைச்சர் பெரியகருப்பன் தலைமையில் அனைத்து மண்டல இணைப்பதிவாளர்கள் மற்றும் மாவட்ட மத்திய கூட்டுறவு வங்கி மேலாண்மை இயக்குநர்களுடனான ஆய்வு கூட்டம் நேற்று நடைபெற்றது.

இக்கூட்டத்தில் உணவு மற்றும் நுகர்வோர் பாதுகாப்புத்துறை கூடுதல் தலைமை செயலர் ராதாகிருஷ்ணன், கூட்டுறவுச்சங்கங்களின் பதிவாளர் சண்முகசுந்தரம், கூடுதல் பதிவாளர்கள் சங்கர், வில்வசேகரன், சுப்பிரமணியன் மற்றும் உயர் அலுவலர்கள் கலந்துக்கொண்டனர். இதன் பின்னர், நிருபர்களிடம் கூட்டுறவுத்துறை அமைச்சர் பெரியகருப்பன் கூறியிருப்பதாவது:  தமிழகத்தில் செயல்படும் நியாயவிலைக்கடைகளில் உள்ள 2.19 கோடி குடும்ப அட்டைதாரர்களுக்கு பொங்கல் பரிசு தொகுப்பு பை எந்தவித தாமதமுமின்றி வழங்க திட்டம் வகுக்கப்பட்டுள்ளது.

மேலும், அதற்கேற்ப பணியாளர்களை அமர்த்தி குடும்ப அட்டைதாரர்களுக்கு தங்குதடையின்றி விநியோகம் செய்வதற்கு நடவடிக்கையை அதிகாரிகள் மேற்கொள்வர். தமிழகத்தில் கூட்டுறவுத்துறை மூலம் செயல்படும் மாவட்ட மத்திய கூட்டுறவு வங்கிகள், நகர கூட்டுறவு வங்கிகள் மற்றும் கூட்டுறவு பண்டகசாலைகள் தொடர்பாக ஆய்வு மேற்கொள்ளப்பட்டு சங்கங்களின் வளர்ச்சிக்கு பல சீரிய திட்டங்களை வகுத்துள்ளோம்.

அந்தவகையில், கூட்டுறவுத்துறை மூலம் செயல்படும் நியாயவிலைக்கடைகளில் 6,503 காலிப்பணியிடங்கள் நிரப்புவதற்கு மாவட்ட ஆள்சேர்ப்பு மூலம் விண்ணப்பங்கள் கோரப்பட்டதில் 4 லட்சத்து 16 ஆயிரத்து 392 பேர் விண்ணப்பங்கள் பெறப்பட்டுள்ளது. அவர்களுக்கான நேர்காணல் தேர்வு நடத்துவதற்கு தகுந்த ஏற்பாடுகள் மேற்கொள்ளுமாறும், தகுதியுள்ள நபர்களை தேர்வு செய்து பணியில் அமர்த்த செய்வதற்கான நடவடிக்கைகளை முடிக்க வேண்டும் என அனைத்து மண்டல இணைப்பதிவாளர்களுக்கும் உத்தரவிடப்பட்டுள்ளது. இவ்வாறு அவர் கூறினார்.

Related Stories: