திண்டுக்கல் கலெக்டர் அலுவலகம் அருகே சர்வீஸ் ரோட்டில் ஆக்கிரமிப்பால் விபத்து அபாயம்

திண்டுக்கல்: திண்டுக்கல் கலெக்டர் அலுவலகம் அருகே திண்டுக்கல்-கரூர் நான்கு வழிச்சாலை உள்ளது. திண்டுக்கல் பஸ் ஸ்டாண்டிலிருந்து வரும் டவுன் பஸ்கள் ஆர்.எம். காலனி வழியாக கலெக்டர் அலுவலகத்திற்கு செல்ல நான்கு வழிச்சாலையில் இருந்து பிரிந்து சர்வீஸ் ரோடு செல்கிறது. இந்த ரோடு வழியாக செல்லும் டவுன் பஸ்கள் உள்ளிட்ட வாகனங்கள் சர்வீஸ் ரோட்டில் செல்கின்றன. இந்த ரோடு செங்குளம் அருகே நான்கு வழிச்சாலையில் இணைகிறது. மேலும் திண்டுக்கல் மாவட்ட விளையாட்டு அரங்கம் அருகே உள்ள இந்த சர்வீஸ் ரோட்டில் போக்குவரத்து விதிகளை மீறி ரோட்டை ஆக்கிரமித்து லாரிகள் வரிசையாக நிறுத்தப்படுகின்றன.

இதனால் பஸ்கள் உள்ளிட்ட வாகனங்கள் செல்வதற்கு இடையூறாக உள்ளது. மேலும் சரளபட்டி பிரிவு அருகே ரோட்டின் இருபுறமும் லாரிகள், கன்டெய்னர் லாரிகளும் நிறுத்தப்படுகின்றன. இதன் வழியாகத்தான் கலெக்டர் அலுவலகம் மாவட்ட காவல்துறை கண்காணிப்பாளர் அலுவலகம், கோர்ட் மற்றும் வேலைவாய்ப்பு அலுவலகம் செல்ல வேண்டியுள்ளது. காலை நேரங்களில் அலுவலகத்திற்கு செல்வோர் பள்ளி, கல்லூரிக்கு செல்லும் மாணவர்கள், மாணவிகள், இருசக்கர வாகனத்தில் செல்வோர் இந்த சர்வீஸ் ரோட்டை அதிகம் பயன்படுத்துகின்றனர்.

இந்த ரோட்டின் இருபுறங்களிலும் ஆக்கிரமித்து லாரிகளை நிறுத்துவதால், அந்த வழியாக செல்லும் டூவீலர் ஓட்டுனர்கள் அடிக்கடி விபத்தில் சிக்குகின்றனர். திண்டுக்கல்-மதுரை நான்கு வழி சாலையில் பழனி பைபாஸ் அருகே மேற்கு மீனாட்சிநாயக்கன்பட்டி சர்வீஸ் ரோட்டிலும் இதே நிலை நீடிக்கிறது. வாகன பழுது பார்க்கும் நிறுவனங்கள்  சர்வீஸ் ரோட்டை ஆக்கிரமித்து வாகனங்களை வரிசையாக நிறுத்தி வைத்துள்ளன. ஏதேனும் அசம்பாவிதம் நிகழும் முன்பு ஆக்கிரமிப்புகளை போலீசார் அப்புறப்படுத்த வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

Related Stories: