விரிசல்களில் வளரும் மரக்கன்றுகள், உடைந்த குழாய்கள் மார்த்தாண்டம் மேம்பால பராமரிப்பு பணி தொடங்குவது எப்போது?

*வர்த்தகர் சங்கம் போராட்டம் அறிவிப்பு

மார்த்தாண்டம் : குமரி  மாவட்டத்தில் நாகர்கோவிலுக்கு அடுத்த 2வது வர்த்தக நகரம் மார்த்தாண்டம்  ஆகும்.  இதனால் இங்கு தினந்தோறும் வாகன போக்குவரத்து அதிகம் காணப்படும்.  இதனால் ஏற்படும் போக்குவரத்து நெரிசலுக்கு தீர்வு காண்பதற்காக 4 ஆண்டுக்கு  முன்பு ரூ.230 கோடி செலவில்  உயர் தர தொழில்நுட்பத்தில் ஹைட்ராலிக்  செக்அப்சர்களுடன் இரும்பு மேம்பாலம் கட்டப்பட்டது. இந்த பாலம் பம்மம்  பகுதி முதல் குழித்துறை தாமிரபரணி ஆற்றுப்பகுதி வரை 2.5  கிலோ மீட்டர்  நீளத்துக்கு செல்கிறது. பாலத்திலும், அதன் கீழ்பகுதியிலும் தினமும் வாகன  போக்குவரத்து அதிகம் காணப்படுகிறது.

இந்த பாலத்தை தனியார்  நிறுவனம்  கட்டமைத்தது. அந்த நிறுவனம் தான் இதில் பராமரிப்பு பணிகளையும் மேற்கொள்ள  வேண்டும் என ஒப்பந்தத்தில் உள்ளது. ஆனால் நீண்ட காலம் ஆகியும் பாலத்தில்  பராமரிப்பு பணிகள் மேற்கொள்ளப்படவில்லை. கனமழையாலும், பராமரிப்பு  பணிகள் செய்யப்படாததாலும் இந்த பாலம் கடுமையாக சேதமடைந்து மேடு பள்ளங்களாக  காட்சியளிக்கிறது. பாலத்தின் விரிசல்களில் அரச மரக்கன்றுகள் முளைத்து  வளர்ந்துள்ளன.

அவை ஆழமாக வேர்விட்டு மரமாக வளரும் பட்சத்தில் பாலத்தின்  உறுதித்தன்மை கேள்விக்குறியாகி விடும். பாலத்தில் கனரக வாகனங்கள்  செல்லும்போது கடுமையான அதிர்வுகள் ஏற்படுகிறது. இதனால் பாலத்தின் அருகில்  வசிக்கும் மக்கள் பீதியடைந்துள்ளனர்.பாலத்தில் வெடிப்பு ஏற்பட்ட ஒருசில  இடங்களில் தெர்மாக்கோல் வைத்து தற்காலிகமாக அடைக்கப்பட்டுள்ளது. ஆனால்  அதனால் எவ்வித பலனும் இல்லை.

பாலத்தின் மேல் பகுதியில் இருபுறங்களிலும்  மழைநீர் செல்வதற்காக பைப்புகள் அமைக்கப்பட்டுள்ளது. தற்போது இந்த  பைப்புகளும் உடைந்து விட்டதால், மழைநீர் பைப் வழியாக வெளியேறி பாலத்தின்  கீழே உள்ள சாலையில் அருவிபோல் கொட்டுகிறது.இதனால் வாகன ஓட்டிகள்  பாதிப்படைகின்றனர். எனவே இந்த பாலத்தை விரைவில் சீரமைக்க தேசிய  நெடுஞ்சாலைத்துறை நடவடிக்கை எடுக்க வேண்டுமெனவும், இல்லையெனில்  மார்த்தாண்டம்  நகர வர்த்தக சங்கம் சார்பில் போராட்டம் நடத்தப்படும் எனவும்  அதன் தலைவர் தினகர் எச்சரிக்கை விடுத்துள்ளார்.

Related Stories: