தூய்மை நகரத்திற்கான மக்கள் இயக்கத்தில் சிறப்பாக பணியாற்றியவர்களுக்கு பாராட்டு: மேயர் பிரியா சான்றிதழ், விருது வழங்கினார்

சென்னை: தூய்மை நகரத்திற்கான மக்கள் இயக்கத்தில் சிறப்பாகப் பணியாற்றியவர்களுக்கு மேயர் பிரியா பாராட்டு சான்றிதழ் மற்றும் விருது வழங்கினார். தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் ஆலோசனையின்படி, சுத்தமான, பசுமையான மற்றும் நீடித்த சுற்றுச்சூழலை உறுதிசெய்யும் பொருட்டு நகரங்களில் பெருமளவிலான மக்கள் பங்கேற்புடன், ஒவ்வொரு மாதமும் இரண்டாம் மற்றும் நான்காம் சனிக்கிழமைகளில் தீவிரத் தூய்மைப் பணிகள் மற்றும் விழிப்புணர்வு முகாம்கள்  நடத்தப்படும் என மானியக் கோரிக்கையில் அறிவிக்கப்பட்டது.

இதை தொடர்ந்து, மாநிலத்தில் உள்ள நகர்ப்புற பகுதிகளில் தீவிர தூய்மைப் பணித் திட்டத்தினை தொடங்கி வைக்கும் விதமாகவும், முதல்வர்  சுத்தமான, பசுமையான மற்றும் நீடித்த சுற்றுச்சூழலை உறுதிசெய்யும் வகையிலும், நகரங்களில் பெருமளவிலான மக்கள் பங்கேற்புடன் நகரங்களின் தூய்மைக்கான மக்கள் இயக்கத்தின் கீழ் தீவிர தூய்மைப் பணிகள் மற்றும் விழிப்புணர்வு முகாமை 3.6.2022 அன்று  சென்னை மாநகராட்சிக்குட்பட்ட ராயபுரம் மண்டலம், வார்டு-53ல் உள்ள தங்கச்சாலை மேம்பால பூங்கா அருகில் தொடங்கி வைத்தார்.

இந்த மாபெரும் மக்கள் இயக்கத்தில்  சென்னை மாநகராட்சியில் நாள்தோறும் மேற்கொள்ளப்பட்டு வரும் தூய்மைப் பணிகளோடு, ஒவ்வொரு மாதமும் இரண்டாம் மற்றும் நான்காம் சனிக்கிழமைகளில் தீவிர தூய்மைப் பணிகள் மற்றும் விழிப்புணர்வு முகாம்கள் மக்கள் பிரதிநிதிகள், பொதுமக்கள், மாணவ, மாணவியர், தன்னார்வ தொண்டு அமைப்புகள், மகளிர் சுயஉதவிக் குழுக்கள், குடியிருப்போர் நலச் சங்கங்கள், வியாபார நிறுவனங்கள் மற்றும் மாநகராட்சிப் பணியாளர்களின் ஒத்துழைப்போடு சிறப்பாக செயல்படுத்தப்பட்டு வருகிறது.

சென்னை மாநகராட்சியின் சார்பில் தீவிர தூய்மைப் பணி, குப்பையை மக்கும், மக்காத குப்பையாக பிரித்து வழங்குவதன் அவசியம் குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்துதல், பள்ளிகள் மற்றும் கல்லூரிகளில் பயிலும் மாணவ, மாணவியர்கள் மூலம் குப்பையை முறையாக பிரித்து வழங்க விழிப்புணர்வு ஏற்படுத்தி உறுதிமொழி எடுத்தல், மாநகராட்சிக்குட்பட்ட பகுதிகளில் உள்ள நீர்நிலைகளில் ஆகாயத்தாமரைகள் மற்றும் வண்டல்களை அகற்றுதல், மழைநீர் வடிகால்களை தூர்வாருதல் மற்றும் சென்னை மாநகரில் பசுமை பரப்பளவை அதிகரிக்கும் வகையில் பெருமளவில் மரக்கன்றுகளை நட்டு பராமரித்தல் போன்ற பல்வேறு நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.

நகரங்களின் தூய்மைக்கான மக்கள் இயக்கத்தின் கீழ் செயல்படும் தீவிர தூய்மைப் பணிகள் மற்றும் விழிப்புணர்வு முகாமில் சிறப்பாக பணியாற்றிய தூய்மைப் பணியாளர்கள், பல்வேறு துறைகள் மற்றும் சங்கங்களின் பிரதிநிதிகள், பொதுமக்கள், குடியிருப்பு நலச் சங்கப் பிரதிநிதிகள் மற்றும் தன்னார்வ அமைப்பினைச் சார்ந்தவர்கள் உள்ளிட்ட 164 பேரை மேயர் பிரியா நேற்று ரிப்பன் கட்டிட வளாகக் கூட்டரங்கில் நடந்த நிகழ்ச்சியில் பாராட்டி சான்றிதழ் மற்றும் விருதுகளை வழங்கினார். முன்னதாக, மேயர் தலைமையில் நகரங்களின் தூய்மை குறித்த என் நகரம், என் பெருமை உறுதிமொழி எடுத்துக் கொள்ளப்பட்டது. நிகழ்ச்சியில்,  துணை மேயர் மகேஷ்குமார், ஆணையர் ககன்தீப் சிங் பேடி, ஆளுங்கட்சித் தலைவர் ராமலிங்கம், உள்பட பலர் கலந்து கொண்டனர்.

Related Stories: