மதுரையில் பார் கவுன்சில் கிளை துவக்கக் கோரிய மனு தள்ளுபடி

மதுரை: மதுரையில் பார் கவுன்சில் கிளை அமைக்கக் கோரிய மனு தள்ளுபடியானது. விருதுநகர் மாவட்டம், சிவகாசி அருகே ஜமீன்சல்வார்பட்டியைச் சேர்ந்த வக்கீல் எஸ்.எம்.ஆனந்தமுருகன், ஐகோர்ட் மதுரை கிளையில் தாக்கல் செய்த மனுவில், ‘‘தமிழ்நாடு - பாண்டிச்சேரி பார் கவுன்சில் சங்க அலுவலகம் சென்னையில் அமைந்துள்ளது. சட்டப்படிப்பை முடித்த மதுரை உள்ளிட்ட தென் மாவட்டங்களைச் சேர்ந்த மாணவர்கள், தங்களை வழக்குரைஞர்களாக பார் கவுன்சிலில் பதிவு செய்ய வேண்டும். இதற்காக அவர்கள் சென்னைக்கு தான் செல்ல வேண்டும். நீண்ட தூரம் செல்ல வேண்டியுள்ளதால் பெண்கள் மற்றும் மாற்றுத்திறனாளிகள் பெரிதும் பாதிக்கின்றனர்.

எனவே, ஐகோர்ட் மதுரை கிளை வளாகத்தில் பார் கவுன்சில் கிளையை துவக்குமாறு உத்தரவிட வேண்டும்’’ என்று கூறியிருந்தார். இந்த மனுவை விசாரித்த நீதிபதிகள் டி.கிருஷ்ணகுமார், ஆர்.விஜயகுமார் ஆகியோர், ‘‘சென்னைக்கு சென்று வருவதில் சிரமம் உள்ளதாக கூறப்பட்டுள்ளதைத் தவிர வேறு காரணங்கள் எதுவும் கூறப்படவில்லை. பார் கவுன்சில் கிளை திறப்பது என்பது நிர்வாகரீதியான முடிவு. இதில் நீதிமன்றம் தலையிட வேண்டியதில்லை. எனவே, இந்த மனு தள்ளுபடி செய்யப்படுகிறது’’ என உத்தரவிட்டனர்.

Related Stories: