சுனாமி நினைவு தினத்தில் அஞ்சலி செலுத்த வந்தபோது கூட்டுறவுத்துறை செயலாளர் கார் விபத்தில் சிக்கியது: காயமின்றி உயிர் தப்பினார்

சென்னை: கூட்டுறவுத்துறை செயலாளர் ராதாகிருஷ்ணன், சுனாமி நினைவு தினமான நேற்று, பட்டினப்பாக்கம் கடற்கரைக்கு அஞ்சலி செலுத்த வந்தபோது, அவர் கார் மீது எதிரே வந்த சுற்றுலா வேன் மோதி விபத்துக்குள்ளானது.  சுனாமியால் உயிர் நீத்தவர்களுக்கு அஞ்சலி செலுத்த பட்டினப்பாக்கம் நொச்சிகுப்பம் மீனவர்கள் சார்பில் ஏற்பாடுகள் செய்யப்பட்டிருந்தது. இதற்காக கூட்டுறவுத்துறை செயலாளர் ராதாகிருஷ்ணனை மீனவர்கள் அழைத்து இருந்தனர். மீனவர்களின் வேண்டுகோளை ஏற்று, அவர் காலை தனது காரில் பட்டினப்பாக்கம் நொச்சிகுப்பத்திற்கு சென்றார்.

நிகழ்ச்சி நடைபெறும் பட்டினப்பாக்கம் சர்வீஸ் சாலையில் உள்ள இடத்திற்கு செயலாளர் கார் சென்று கொண்டிருந்தது. அப்போது தண்டையார்பேட்டையில் இருந்து மேல்மருவத்தூருக்கு சுற்றுலா சென்ற வேன் ஒன்று, வேகமாக சர்வீஸ் சாலையில் வந்தது. இதனால் கட்டுப்பாட்டை இழந்த வேன், எதிர்பாராத விதமாக ராதாகிருஷ்ணன் கார் மீது நேருக்கு நேர் மோதி விபத்துக்குள்ளானது. இதில் காரின் முன்பகுதி கடுமையாக சேதமடைந்தது.  இதில் சுற்றுலா வேனுக்கும் லேசான சேதம் ஏற்பட்டது. விபத்தின்போது காரில் இருந்த செயலாளர் ராதாகிருஷ்ணன் சிறு காயங்கள் இன்றி அதிர்ஷ்டவசமாக உயிர்தப்பினார்.

இதனால் சிறிது நேரம் பட்டினப்பாக்கம் பகுதியில் பரபரப்பு ஏற்பட்டது. விபத்தால் சர்வீஸ் சாலையில் கடும் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டது. உடனே ராதாகிருஷ்ணன் விபத்துக்குள்ளான காரில் இருந்து இறங்கி சாலையில் விபத்தால் ஏற்பட்ட போக்குவரத்தை நெரிச்சலை சரி செய்தார். பிறகு விபத்து குறித்து தகவல் அறிந்த மெரினா பகுதியில் பணியில் இருந்த போக்குவரத்து போலீசார் விரைந்து சென்று விபத்துக்குள்ளான காரில் இருந்து டிரைவரை மீட்டனர். மேலும், இதுகுறித்து அண்ணாசதுக்கம் போக்குவரத்து புலனாய்வு பிரிவு போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

Related Stories: