நிலக்கடலை சாகுபடித் தொழில் நுட்பங்கள்-வேளாண்மை துறை ஆலோசனை

புதுக்கோட்டை : நிலக்கடலைச் சாகுபடியின்போது கடைப்பிடிக்க வேண்டிய தொழில்நுட்பங்கள் குறித்து புதுக்கோட்டை மாவட்ட வேளாண்மை துறை விடுத்துள்ள செய்திக் குறிப்பு:

விதை நேர்த்தி: நிலக்கடலையில் விதை மூலமும் மண் மூலமும் பரவும் நோய்களான வேரழுகல், தண்டழுகல் மற்றும் இலைப்புள்ளி நோய் ஆகியவற்றைக் கட்டுப்படுத்த விதை நேர்த்தி செய்ய வேண்டும்.

ஒரு கிலோ விதைக்கு நான்கு கிராம் டிரைக்கோடர்மா விரிடி என்ற உயிரியல் பூஞ்சணக்கொல்லி கொண்டு விதை நேர்த்தி செய்து உடன் விதைக்க வேண்டும் அல்லது ஒரு கிலோ விதைக்கு இரண்டு கிராம் கார்பன்டாசிம் 50 சதம் டபிள்யு.பி. பூஞ்சணக்கொல்லி கொண்டு விதை நேர்த்தி செய்து 24 மணி நேரம் வைத்திருந்து விதைக்க வேண்டும்.திரவ உயிர் உரம்: ஒரு ஏக்கருக்கான விதையுடன் ரைசோபியம் (நிலக்கடலை) மற்றும் பாஸ்போபாக்டீரியா ஆகிய திரவ உயிர் உரங்களை தலா 50 மி.லி. கலந்து விதை நேர்த்தி செய்து நிழலில் உலர்த்தி விதைக்க வேண்டும்.

உயிரியல் மருந்து கொண்டு விதை நேர்த்தி செய்யும் விதைகளை இரசாயனப் பூஞ்சணக்கொல்லி கொண்டு விதை நேர்த்தி செய்தல் கூடாது. நிலக்கடலை விதை நேர்த்தி செய்யும்போது விதையின் மேல்தோல் உரியாமல் கவனமாக விதை நேர்த்தி செய்ய வேண்டும். விதையுறையில் பாதிப்பு ஏற்படின் முளைப்புத் திறன் பாதிக்கப்படும்.விதைப்பு: நன்கு உழவு செய்யப்பட்ட நிலத்தில் ஏர் மூலம் அல்லது களைக்கொத்து கொண்டு வரிசைக்கு வரிசை 30 சென்டி மீட்டர் இடைவெளியும் செடிக்கு செடி 10 சென்டி மீட்டர் இடைவெளி விட்டு விதைப்பு செய்ய வேண்டும்.

சீரான பயிர் எண்ணிக்கை கிடைக்க விதைப்புக் கருவி அல்லது கொரு கொண்டு விதைக்கலாம். விதைக்கும்போது விதைகளை நிலத்தில் 4 செ.மீ. ஆழத்திற்கு மிகாமல் விதைத்தல் வேண்டும்.

வரப்பு பயிர் சாகுபடி: நிலக்கடலையில் கூடுதல் மகசூல் பெற ஒருங்கினைந்த பூச்சி மேலாண்மை முறையில் வரப்பில் ஆமணக்கு விதைகளை விதைப்பதன் மூலம்; நிலக்கடலை பயிரினை தாக்கும் பூச்சிகள் வரப்பு பயிரினை தாக்குவதல் அவற்றை முன்கூட்டியே கண்டறிந்து கட்டுபடுத்தலாம்.

ஊட்டச்சத்து மேலாண்மை: நிலக்கடலையில் கூடுதல் மகசூல் பெற ஊட்டச்சத்து மேலாண்மை இன்றியமையாதது. ஒரு ஏக்கருக்கு ஐந்து டன் தொழுஉரம் அல்லது தென்னை நார்க்கழிவு கம்போஸ்ட் உரத்தினை இட்டு நன்கு உழவு செய்ய வேண்டும். மண் பரிசோதனையின் அடிப்படையில் உரமிடவேண்டும் அல்லது பொதுப் பரிந்துரையாக இறவைப் பயிருக்கு ஏக்கருக்கு யூரியா 22 கிலோ, சூப்பர் பாஸ்பேட் 125 கிலோ, பொட்டாஷ் 16 கிலோ இடலாம்.

மானாவாரி எனில் யூரியா 11 கிலோ, சூப்பர் பாஸ்பேட் 62 கிலோ மற்றும் பொட்டாஷ் 8 கிலோ என்ற அளவில் இடவேண்டும். திரட்சியான, பொக்கற்ற காய்கள் பெறுவதற்கு, சுண்ணாம்பு மற்றும் கந்தகச் சத்து அவசியமாகும். இதற்கு ஒரு ஏக்கருக்கு 80 கிலோ ஜிப்சம் அடியுரமாக இட வேண்டும்.களை மேலாண்மை: நிலக்கடலையை விதைத்தவுடன் நிலத்தில் ஈரம் இருக்கும் நிலையில் களைகள் முளைக்கும்முன் தெளிக்கும் களைக்கொல்லி பென்டிமெத்தலின் 30 இ.சி. ஒரு லிட்டர், ஒரு ஏக்கருக்கு 200 லிட்டர் நீருடன் கலந்து தெளித்துக் களைகளைக் கட்டுப்படுத்தலாம்.

களை முளைக்கும் முன் தெளிக்க வேண்டிய களைக்கொல்லியைத் தெளிக்காத நிலையில், களைகளைப் பொறுத்து விதைத்த 20-25ஆம் நாள், களைகள் முளைத்த பின்னர் தெளிக்கும் களைக்கொல்லிகளான இமாசிதபைர் 300 மி.லி., குயிசலோபாப் ஈத்தைல் 5 இ.சி. 350 மி.லி ஆகிய இவற்றுள் ஏதேனும் ஒன்றை ஏக்கருக்கு தெளித்துக் கட்டுப்படுத்தலாம்.

களைக்கொல்லி தெளிக்கவில்லை எனில் விதைத்த 20ஆம் நாளிலும் 45ஆம் நாளிலும் ஆட்களை வைத்துக் கைக்களை எடுக்க வேண்டும்.

களைக்கொல்லி தெளிக்கும்போது வயலில் ஈரம் இருப்பதும், கைத்தெளிப்பான் பயன்படுத்துகையில் தட்டைவிசிறித் தெளிப்புமுனையைப் பயன்படுத்துவதும், வயலில் பின்னோக்கி நடந்துசெல்வதும் இன்றியமையாதனவாகும்.நுண்ணூட்ட கலவை: ​நிலக்கடலையில் மகசூலை அதிகமாக்க ஒரு ஏக்கருக்கு 5 கிலோ நிலக்கடலை நுண்ணூட்ட கலவை உரத்தினை 20 கிலோ மணலுடன் கலந்து, விதைப்பிற்கு முன் மேலாக இடவேண்டும்.

நீர்ப்பாசனம் : ​நிலக்கடலை சாகுபடியில் தெளிப்பு நீர்ப்பாசனம் அமைத்து பாசன நீரினை சேமித்து குறைந்த நீரில் அதிக பரப்பில் சாகுபடி மேற்கொள்ளலாம்.

அனைத்து வட்டார வேளாண்மை விரிவாக்க மையங்களில் தேவையான அளவு நிலக்கடலை நுண்ணூட்ட கலவை உரம் மற்றும் உயிர் உரங்கள் ஆகியன இருப்பு வைக்கப்பட்டு விநியோகம் செய்யப்பட்டு வருகிறது. ​சாகுபடித் தொழில்நுட்பங்களை முறையாகக் கடைப்பிடித்து நிலக்கடலையில் கூடுதல் மகசூல் பெற்று பயன்பெறுமாறு, புதுக்கோட்டை மாவட்ட வேளாண்மை துறை ஆலோசனை தெரிவித்துள்ளது.

Related Stories: