நலிந்து வரும் செங்கல் உற்பத்தி தொழிலை காப்பாற்ற கண்மாய்களில் கரம்பை மண் எடுக்க அனுமதிக்க வேண்டும்

*சூளை உரிமையாளர்கள் வேண்டுகோள்

வருசநாடு : கடமலை - மயிலை ஒன்றியத்தில் ஏராளமான செங்கல் காளவாசல்கள் இயங்கி வருகிறது. கரம்பை மண் தட்டுப்பாடு காரணமாக இந்த தொழிலில் பின்னடைவு ஏற்பட்டுள்ளது. எனவே கண்மாய்களில் இருக்கும் கரம்பை மண்ணை அள்ளிக்கொள்ள தங்களை அனுதிக்க வேண்டும் என்று செங்கல் சூளை உரிமையாளர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

கடமலை-மயிலை ஒன்றியத்தில் ஏராளமான செங்கல் காளவாசல்கள் இயங்கி வருகின்றன. இங்கு தயார் செய்யப்படும் செங்கல்கள் திண்டுக்கல், கரூர் மதுரை, விருதுநகர் உள்ளிட்ட பல்வேறு மாவட்டங்களுக்கு ஏற்றுமதி செய்யப்பட்டு வருகிறது. இந்த நிலையில் கடமலை - மயிலை ஒன்றிய கிராமங்களில் ஏராளமான கண்மாய்கள் உள்ளன. இருப்பினும் செங்கல் காளவாசல் நடத்தி வரும் உரிமையாளர்கள் வெளி மாவட்டங்களில் இருந்து கரம்பை மண் வாங்கும் நிலை தொடர்கிறது. மேலும் கரம்பை மண் இறக்குமதி செய்ய அதிக செலவு செய்யவேண்டிய நிலை தொடர்வதால் செங்கல் விலை கிடுகிடுவென உயர்ந்து வருகிறது.

இதன்படி கடந்த மாதம் வரை ரூ.6க்கு விற்பனையாகி வந்த செங்கல் தற்போது ரூ.7 என உயர்ந்துள்ளது. இதனால் புதிதாக வீடு மற்றும் கடைகள் உள்ளிட்ட கட்டிடங்கள் கட்டுபவர்கள் மிகுந்த கவலையடைந்துள்ளனர். இந்த விலை மேலும் அதிகரிக்கக்கூடும் என்ற அச்சத்தில் ஏராளமானோர் முன்னெச்சரிக்கையாக அதிக அளவில் செங்கல்களை வாங்கி இருப்பு வைத்து வருகின்றனர். விலை அதிகரித்தாலும் கரம்பை மண் இறக்குமதி செலவு அதிக அளவில் உள்ளதால் செங்கல் காளவாசல் உரிமையாளர்களுக்கு அதிக லாபம் கிடைக்கவில்லை என கூறப்படுகிறது.

கடமலை - மயிலை ஒன்றியத்தில் ஏராளமான கண்மாய்கள் உள்ளன. இதில் பெரும்பாலானவை பராமரிப்பில்லாமல் காணப்படுகின்றன. இதுபோன்ற பராமரிப்பு இல்லாத கண்மாய்களில் விதிமுறைகளுக்கு உட்பட்டு செம்மண், சவுடு மண் அள்ளுவதற்கு விவசாயிகளுக்கு அனுமதி வழங்கப்பட்டுள்ளது. இதேபோல் கரம்பை மண் அள்ள தங்களுக்கும் அரசு அனுமதி வழங்க வேண்டும் என்று செங்கல் சூளை உரிமையாளர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர். இதுபோல் கண்மாய்களில் கரம்பை மண் அள்ளுவதற்க அனுதி அளித்தால் செங்கலுக்ான உற்பத்தி செலவு குறைந்து அதன் விற்பனை விலையும் குறையும் என அவர்கள் கூறுகின்றனர். மேலும் மண் அள்ளுவதால் கண்மாய்களும் நீரை தேக்கி வைக்கும் வகையில் மாற்று விவசாயத்திற்கும் பயனளிக்கும் என்பது அவர்களின் கருத்தாக உள்ளது.

இதனைத்தொடர்ந்து கடமலை - மயிலை ஒன்றியத்தில் கண்டமனூர், கடமலைக்குண்டு, மயிலாடும்பாறை, வருசநாடு, தங்கம்மாள்புரம், தும்மக்குண்டு, குமணன்தொழு, சிங்கராஜபுரம், மூலக்கடை உள்ளிட்ட கிராமங்களில்  செங்கல் தயாரிக்கும் பணிகள் அதிக அளவில் நடைபெற்று வந்தது. செங்கல் தயாரிக்கும் பணிகளில் ஏராளமான கூலித் தொழிலாளர்கள் ஈடுபட்டு வந்தனர். இந்த நிலையில்  கடந்த சில மாதங்களாக விலைவாசி உயர்வின் காரணமாக கூலி தொழிலாளிகளுக்கு அதிகளவில் சம்பளம் கொடுக்க வேண்டிய கட்டாயத்தில் சூளை அதிபர்கள் உள்ளனர். மேலும் கடந்த இரண்டு மாதங்களாக செங்கல் தயாரிக்கும் பணிகள் வழக்கம்போல் நடைபெறவில்லை.

இதனால் இந்த பணியை சார்ந்து இருக்கும்  ஆயிரத்திற்கும் மேற்பட்ட கூலித் தொழிலாளர்கள் போதிய வருமானம் இன்றி தவித்து வருகின்றனர். எனவே கூலி தொழிலாளர்கள் நலன் கருதி கண்மாய்களில் கரம்பை மண் அள்ளிக்கொள்ள விதிமுறைகளுடன் அரசு அனுமதி வழங்க வேண்டும் என்பது செங்கல் சூளை உரிமையாளர்களின் வேண்டுகோளாக உள்ளது. இதுதொடர்பாக வருசநாடு செங்கல் சூளை அதிபர்கள் கூறுகையில், செங்கல் தயாரிக்கும் பணிகள் மிகவும் பாதிப்படைந்துள்ளது.

இதனால்  தொழிலாளர்கள் மிகவும் அவதிப்படுகின்றனர். எனவே இப்பிரச்னையில் மாவட்ட நிர்வாகம் உரிய நடவடிக்கை எடுத்து பராமரிப்பில்லாத கண்மாய்களில் இருந்து கரம்பை மண் அள்ளுவதற்கு எங்களுக்கு அனுமதி வழங்க வேண்டும். இதனால் கண்மாய்களில் தூர்வாரியதுபோல் நீர்பிடிப்பு பகுதி அதிகரிக்கும். அவற்றில் அதிகம் தண்ணீர் தேக்கினால் விவசாயத்திற்கு பயனுள்ளதாக அமையும். எனவே செங்கல் தயாரிப்பு பணிகளில் உள்ளோர் கரம்பை மண்ணை கண்மாய்களில் இருந்து எடுத்துக்கொள்ள அனுமதிப்பது குறித்து அதிகாரிகள் விரைவாக நல்ல முடிவினை அறிவிக்க வேண்டும் என்றனர்.

இலவசமாக தூர்வாரும் பணி

பொதுவாக கண்மாய்களை தூர்வாரும்போது அதற்காக செலவுத்தொகையை அரசு நிர்வாகம் ஏற்க வேண்டியதாக உள்ளது. ஆனால் கண்மாய்களில் உள்ள கரம்பை மண்ணை செங்கல் சூளை உரிமையாளர்கள் குறிப்பிட்ட அளவில் எடுத்துக்கொள்ள அனுமதிக்கும் நிலையில் கண்மாய்கள் தூர்வாரும் பணிகள் இலவசமாக நடைபெறும் என்பதை மறுப்பதற்கில்லை. இருப்பினும் கண்மாய்களில் கரம்பை மண் அள்ளுவதை அதிகாரிகள் கண்காணிக்க வேண்டியது அவசியம்.

அவர்கள் அனுமதி அளிக்கும் பகுதிகளில் குறிப்பிட்ட ஆழத்திற்கு மட்டும் சூளை உரிமையாளர்கள் கரம்பை மண் எடுக்க வேண்டும். இதுபோல் விதிகளுக்கு உட்பட்டு செயல்படும் நிலையில் அது இருதரப்பினருக்கும் லாபகரமானதாக அமையும் என்பதுடன், கரம்பை மண் பற்றாக்குறையால் நலிவடைந்துள்ள காளவாசல் தொழில் புத்துயிர் பெறும். அதனை நம்பியுள்ள தொழிலாளர்களுக்கு போதிய வருமானம் கிடைக்கும் என செங்கல் சூளை தொழிலாளர்கள் கூறியுள்ளனர்.

Related Stories: