கிறிஸ்துமஸ் விழாவையொட்டி வேளாங்கண்ணி பேராலயத்தில் சிறப்பு திருப்பலி: ஏராளமான பக்தர்கள் பங்கேற்பு

நாகப்பட்டினம்: வேளாங்கண்ணி புனித ஆரோக்கிய அன்னை பேராலயத்தில் கிறிஸ்துமஸ் விழாவை முன்னிட்டு நேற்று முன்தினம் நள்ளிரவு சிறப்பு திருப்பலி நடந்தது. நாகப்பட்டினம் மாவட்டம் வேளாங்கண்ணியில் புனித ஆரோக்கிய அன்னை பேராலயம் சர்வ மதத்தினரும் நம்பிக்கையுடன் வழிபட்டு செல்லும் ஆன்மிக தலமாக விளங்குகிறது. வேளாங்கண்ணி பேராலயம் கீழை நாடுகளின் லூர்து நகர் என்ற பெருமையுடன் அழைக்கப்படுகிறது.

கிறிஸ்தவ ஆலய கட்டிட கலைக்கு மிக அரிதாக கிடைக்கக்கூடிய பசிலிக்கா என்ற பிரம்மாண்ட கட்டிட அமைப்பில் இந்தியாவில் கட்டப்பட்டுள்ள 5 கிறிஸ்தவ ஆலயங்களில் வேளாங்கண்ணி பேராலயமும் ஒன்று என்பது சிறப்பாகும். பேராலயத்தின் அருகிலேயே வங்கக்கடல் அமைந்துள்ளது மேலும் சிறப்பு சேர்ப்பதாக உள்ளது. கிறிஸ்துமஸ் பண்டிகையை முன்னிட்டு இயேசு பிறப்பு நிகழ்ச்சி நேற்று முன்தினம் நள்ளிரவு(24ம் தேதி) பேராலய அதிபர் இருதயராஜ் தலைமையில் நடந்தது. இயேசு பிறப்பை நினைவுபடுத்தும் வகையில் குழந்தை இயேசுவின் பிறப்பின் காட்சிகள் அரங்கேற்றம் செய்யப்பட்டது.

விண்மீன் ஆலயம் அருகில் சேவியர் திடலில் மாநாட்டு பந்தலில் கிறிஸ்துமஸ் குடில் அமைக்கப்பட்டுள்ளது. 460 அடி நீளத்தில் வண்ண விளக்குகளால் அலங்கரிக்கப்பட்ட பந்தல் அமைக்கப்பட்டுள்ளது. இயேசு பிறப்பு நிகழ்ச்சியை காண தமிழகம் மட்டுமின்றி பல்வேறு மாநிலங்களை சேர்ந்த பக்தர்கள் சுற்றுலா பயணிகள் வேளாங்கண்ணியில் குவிந்தனர். கிறிஸ்துமஸ் விழாவை முன்னிட்டு நேற்று பேராலய கீழகோயில், மாதா குளம் ஆகிய இடங்களில் காலை சிறப்பு வழிபாடு நடந்தது.

Related Stories: