கூட்டுறவு சங்க கடன், சந்தா பிடித்தம் விவகாரம் குமரி போக்குவரத்து அதிகாரிகள் உத்தரவுக்கு இடைக்கால தடை: ஐகோர்ட் கிளை உத்தரவு

நாகர்கோவில் : குமரி மாவட்டத்தில் அரசு போக்குவரத்து கழகம் மற்றும் விரைவு போக்குவரத்து கழக தொழிலாளர்கள் சுமார் 3500 பேரை உறுப்பினர்களாக உள்ளடக்கி, அரசு போக்குவரத்து கழக, விரைவு போக்குவரத்து கழக சிக்கன நாணய கூட்டுறவு கடன் சங்கம் நாகர்கோவில் ராணித்தோட்டத்தில் செயல்படுகிறது. கூட்டுறவு சங்கம் சார்பில், உறுப்பினர்களாக உள்ள தொழிலாளர்களுக்கு பல்வேறு வகையிலான கடன்கள் வழங்கப்படுகிறது. இந்த கடன்களுக்கான வட்டி மற்றும் கடன் தொகையை போக்குவரத்து கழக நிர்வாகமே ஊழியர்களின் சம்பளத்தில் இருந்து பிடித்தம் செய்து, கூட்டுறவு சங்கத்துக்கு வழங்கும் நடைமுறை உள்ளது.

பிடித்தம் செய்த கடன் தொகையைமாதந்தோறும் கூட்டுறவு சங்கத்துக்கு போக்குவரத்து கழக நிர்வாகம் வழங்க வேண்டும். சங்க உறுப்பினர்களாக உள்ளவர்களிடம் இருந்து 5 சதவீத சிக்கன நிதியும் பிடித்தம் செய்து, கூட்டுறவு கடன் சங்கத்துக்கு போக்குவரத்து கழக நிர்வாகம் வழங்கும். தற்போது  கூட்டுறவு சங்க சிக்கன நாணய சங்க கடன், உறுப்பினர் சந்தா தொகையை பிடித்தம் செய்து தர முடியாது என்றும், வங்கிகள் மூலம் கூட்டுறவு சங்கமே பிடித்தம் செய்து கொள்ள வேண்டும் என்றும் அதிகாரிகள் அறிவித்துள்ளனர். இந்த அறிவிப்பை தொடர்ந்து கடந்த மாதம் வர வேண்டிய பணம் ரூ.55 லட்சம் வர வில்லை. இதனால் கூட்டுறவு சங்கம் செயலிழக்கும் நிலைக்கு சென்றுள்ளது.  

இந்த பிரச்னை தொடர்பாக அரசு போக்குவரத்து கழக கூட்டுறவு சிக்கன நாணய சங்கம் சார்பில், மதுரை ஐகோர்ட்டில் மனு தாக்கல் செய்யப்பட்டது. இந்த மனுவை விசாரணைக்கு ஏற்றுக் கொண்ட நீதிமன்றம்,  கூட்டுறவு சங்க நிதியை வங்கிகள் மூலம் வசூலித்துக் கொள்ளுமாறு அரசு போக்குவரத்து கழக அறிவிப்புக்கு இடைக்கால தடை விதித்து உத்தரவிட்டு உள்ளது. இதனால் போக்குவரத்து கழக நிர்வாகம் தான், கூட்டுறவு சங்கத்துக்கான நிதியை தொழிலாளர்களிடம் இருந்து பிடித்தம் செய்து வழங்கும் நிலை உள்ளது. விடுமுறை காலத்துக்கு பின், அடுத்த மாதம் வழக்கு விசாரணைக்கு வர உள்ளது.

Related Stories: