வீட்டில் இருந்துதான் ஊழல் தொடங்குகிறது: ஐகோர்ட் வேதனை

மதுரை: கரூர் மாவட்டம், தோகைமலையில் எஸ்ஐ ஆக பணியாற்றியவர் சக்திவேல். இவரது மனைவி தெய்வநாயகி. இவர்கள் மீது வருமானத்திற்கு அதிகமாக ரூ.6.77 லட்சத்திற்கு சொத்து குவித்ததாக வழக்கு உள்ளது. இந்த வழக்கின் விசாரணை திருச்சி லஞ்ச ஒழிப்பு நீதிமன்றத்தில் நடந்தது. விசாரணையின்போது சக்திவேல் இறந்துவிட்டார். இதையடுத்து தெய்வநாயகி மீதான வழக்கு மட்டும் தொடர்ந்து விசாரிக்கப்பட்டது. முடிவில், தெய்வநாயகிக்கு ஓராண்டு சிறை தண்டனை, ரூ.ஆயிரம் அபராதமும் விதிக்கப்பட்டது. இந்த தண்டனையை ரத்து செய்யக்கோரி, தெய்வநாயகி ஐகோர்ட் மதுரை கிளையில் அப்பீல் செய்தார்.

இந்த மனுவை விசாரித்த நீதிபதி கே.கே.ராமகிருஷ்ணன் பிறப்பித்த உத்தரவு: கணவர் லஞ்சம் வாங்குவதை மனைவி தடுக்க வேண்டும். நாட்டில் ஊழல் கற்பனைக்கு எட்டாத அளவுக்கு பரவியுள்ளது. வீடுகளிலிருந்து ஊழல் தொடங்குகிறது. வீட்டில் உள்ளவர்கள் ஊழலை தடுக்காவிட்டால் ஊழலுக்கு முடிவு கட்ட முடியாது. மனுதாரர் தண்டனையை அனுபவிக்க வேண்டும். மனுதாரரை சிறையிலடைக்கவும் அவர் சட்டவிரோதமாக வாங்கிய சொத்துக்களை பறிமுதல் செய்யவும் விசாரணை நீதிமன்றம் நடவடிக்கை எடுக்கவேண்டும். இவ்வாறு உத்தரவிட்டுள்ளார்.

The post வீட்டில் இருந்துதான் ஊழல் தொடங்குகிறது: ஐகோர்ட் வேதனை appeared first on Dinakaran.

Related Stories: