எம்ஜிஆர் சமாதிக்கு தனியாக சென்று மரியாதை செலுத்தியதன் எதிரொலி எடப்பாடி அணியில் இருந்து சி.வி.சண்முகம் விலகுகிறாரா?..கே.பி.முனுசாமி, ஜெயக்குமார் மீது கடும் அதிருப்தி

சென்னை: எம்ஜிஆர் நினைவு நாளையொட்டி அவரது சமாதிக்கு சி.வி.சண்முகம் தனியாக சென்று மரியாதை செலுத்தியதால், எடப்பாடி அணியில் இருந்து அவர் வெளியேறுவார் என்று கூறப்படுகிறது. அதிமுக நிறுவனரும், முன்னாள் முதல்வருமான எம்ஜிஆர் 35வது நினைவு நாளையொட்டி நேற்று எடப்பாடி பழனிசாமி, ஓ.பன்னீர்செல்வம், சசிகலா, டி.டி.வி.தினகரன் ஆகியோர் தனித்தனியாக சென்று சென்னை, கடற்கரை அருகே உள்ள அவரது சமாதியில் மலர்தூவி மரியாதை செலுத்தினர். இதில் எடப்பாடி பழனிசாமியின் தீவிர ஆதரவாளரான முன்னாள் அமைச்சர் சி.வி.சண்முகம் திடீரென அந்த அணியில் இருந்து விலகி தனியாக சென்று எம்ஜிஆர் சமாதியில் மலர்தூவி அஞ்சலி செலுத்தினார்.

சசிகலா, டி.டி.வி.தினகரன், ஓ.பன்னீர்செல்வம் ஆகியோரை கடுமையாக எதிர்த்து வந்தவர் சி.வி.சண்முகம். எடப்பாடி பழனிசாமியின் தீவிர ஆதரவாளராக செயல்பட்டார். அப்படிப்பட்டவர் திடீரென தனியாக செயல்படுவது அதிமுக இடைக்கால பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமிக்கே அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. விழுப்புரம் மாவட்டத்தை சேர்ந்த சி.வி.சண்முகத்துக்கும், கிருஷ்ணகிரி மாவட்டத்தை சேர்ந்த கே.பி.முனுசாமிக்கும் ஆரம்பத்தில் இருந்தே மோதல் போக்கு நிலவியது. இருவரும் ஒரே பிரிவை சேர்ந்தவர்கள் என்பதால், தங்கள் சமுதாயத்தில் யார் பெரியவர்கள் என்பதில் போட்டி நிலவியது. ஆரம்பத்தில் கே.பி.முனுசாமி, ஓ.பன்னீர்செல்வம் அணியில் இருந்ததால், எடப்பாடி அணியில் இருந்த சி.வி.சண்முகத்துக்கு முக்கியத்துவம் அளிக்கப்பட்டு வந்தது.

இந்நிலையில், கே.பி.முனுசாமி ஓபிஎஸ் அணியில் இருந்து வெளியேறி எடப்பாடி அணியில் சேர்ந்ததால் பிரச்னை மீண்டும் விஸ்வரூபம் எடுத்தது. ஆரம்பத்தில் எடப்பாடி பழனிசாமி டெல்லி செல்லும்போது எப்போதும் சி.வி.சண்முகத்தை அழைத்து செல்வார். இது கே.பி.முனுசாமி ஆதரவாளர்களுக்கு எரிச்சலை ஏற்படுத்தியது. எடப்பாடி அணியில், அவருக்கு அடுத்த இடத்தில் கே.பி.முனுசாமிதான் இருக்கிறார். அதனால் கே.பி.முனுசாமிக்குதான் முக்கியத்துவம் அளிக்க வேண்டும் என்று அவரது ஆதரவாளர்கள் போர்க்கொடி தூக்கினர். இதையடுத்து சி.வி.சண்முகத்தை எடப்பாடி புறக்கணிக்க ஆரம்பித்தார்.

மேலும், அதிமுக - பாஜ கூட்டணி சார்பில் தேர்தலில் போட்டியிட்டு தமிழகத்தில் படுதோல்வி அடைந்தபோது, சி.வி.சண்முகம், பாஜகவால்தான் அதிமுக தேர்தலில் தோல்வி அடைந்தது என்று பகிரங்கமாக கூறி வந்தார். இது எடப்பாடி பழனிசாமி, ஜெயக்குமார் உள்ளிட்ட அவரது ஆதரவாளர்களுக்கு எரிச்சலை ஏற்படுத்தியது. சி.வி.சண்முகத்தால் அதிமுக - பாஜ கூட்டணியில் விரிசல் ஏற்படும் என்று பயந்தனர். இந்த நிலையில்தான் கடந்த சில நாட்களுக்கு முன்பும் சி.வி.சண்முகம் தமிழக பாஜ தலைவர் அண்ணாமலை மீது குற்றம் சாட்டி பேட்டி அளித்தார். வருகின்ற நாடாளுமன்ற தேர்தலில் பாஜ, திமுகவுடன் கூட்டணி அமைத்து போட்டியிட அண்ணாமலை முயற்சி செய்கிறார் என்றார்.

இதற்கு பதில் அளித்த அண்ணாமலை, அதிமுக கட்சியின் 3ம் கட்ட தலைவர்களுக்கெல்லாம் பதில் சொல்ல முடியாது என்று கூறினார். தன்னை 3ம் கட்ட தலைவர் என்று அண்ணாமலை கூறிய கருத்துக்கு அதிமுக இடைக்கால பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி பதில் சொல்வார் என்று சி.வி.சண்முகம் எதிர்பார்த்தார். ஆனால், முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார் திடீரென, ‘சி.வி.சண்முகம் கூறியது அவரது சொந்த கருத்து. அதிமுக கட்சியின் கருத்து கிடையாது’ என்றார். ஜெயக்குமாரின் பதிலால் சி.வி.சண்முகம் மேலும் கோபம் அடைந்தார். எடப்பாடி பழனிசாமி சொல்லித்தான் ஜெயக்குமார் கருத்து தெரிவித்துள்ளார் என்று நினைத்தார்.

மேலும், அதிமுகவில் ஒரு மாவட்டத்தில் அதிக செல்வாக்குடன் உள்ள தன்னை, மக்கள் செல்வாக்கு இல்லாத ஒருவரை வைத்து எடப்பாடி பதில் சொல்ல வைத்துள்ளார் என்று தனது ஆதரவாளர்களிடம் புலம்பியுள்ளார். இந்த நிலையில்தான், நேற்று எம்ஜிஆர் நினைவுநாளையொட்டி அவரது சமாதிக்கு எடப்பாடி பழனிசாமியுடன் செல்வதை சி.வி.சண்முகம் புறக்கணித்து விட்டதாக கூறப்படுகிறது. மேலும், விழுப்புரம் மாவட்டத்தில் தனது செல்வாக்கை நிரூபிக்கவும் சி.வி.சண்முகம் திட்டமிட்டுள்ளார்.

கட்சி தலைமை தனக்கு ஆதரவு தெரிவிக்காததால், இனியும் அந்த அணியில் தொடர்வதை விரும்பாத சி.வி.சண்முகம் எடப்பாடி பழனிசாமி அணியில் இருந்து விலகி இருக்கவும் முடிவு செய்துள்ளதாக அவரது ஆதரவாளர்கள் தெரிவித்தனர். இதைத்தொடர்ந்து தனி அணியாக செயல்படுவதா? அல்லது கட்சியில் இருந்து ஒதுங்கி இருப்பதா என்பது குறித்தும் சி.வி.சண்முகம் தனது ஆதரவாளர்களுடன் ஆலோசனை நடத்தி வருவதாக கூறப்படுகிறது.

Related Stories: