ஆருத்ரா கோல்ட் நிதி நிறுவன மோசடி வழக்கு: நடிகர் ரூசோ கைது

* பொருளாதார குற்றப்பிரிவு போலீசார் நடவடிக்கை

* வங்கி கணக்கில் ரூ1 கோடியே 40 லட்சம் முடக்கம்

காஞ்சிபுரம்: காஞ்சிபுரத்தை தலைமையிடமாக கொண்டு செயல்பட்டு ஆருத்ரா கோல்ட் நிதி நிறுவன மோசடி வழக்கில், முகவராக செயல்பட்ட காஞ்சிபுரத்தை சேர்ந்த தொழிலதிபரும்,  நடிகருமான ரூசோ (42) என்பவர் கைது செய்யப்பட்டு, சென்னை புழல் மத்திய சிறையில் அடைக்கப்பட்டார். மேலும், அவரின் வங்கி கணக்கிலிருந்த ரூ1 கோடியே 40 லட்சத்தை முடக்கி சென்னை பொருளாதார குற்றப்பிரிவு போலீசார் நடவடிக்கை எடுத்துள்ளனர். காஞ்சிபுரத்தை தலைமை இடமாகக் கொண்டு செயல்பட்ட ஆருத்ரா கோல்ட் நிதி நிறுவனம் காஞ்சிபுரம், செங்கல்பட்டு, சென்னை, வேலூர், திருவண்ணாமலை உள்ளிட்ட பல்வேறு மாவட்டங்களில் கிளைகளை தொடங்கி பொதுமக்களிடம் இருந்து பல கோடி ரூபாய் முதலீடு பெற்று 30 சதவீதம் வட்டி தருவதாக பொதுமக்களை ஏமாற்றி, அதிக பணம் பெற்றுள்ளனர்.

இந்த, நிறுவனம் குறித்து மோசடி புகார்கள் எழுந்த நிலையில், இந்நிறுவனத்துடன் தொடர்புடையவர்களை பொருளாதார குற்றப்பிரிவு போலீசார் தேடி வந்தனர்.

இந்நிலையில், சென்னை அமைந்தகரை பகுதி இயக்குனராக செயல்பட்ட செந்திலை கைது செய்த போலீசார் தீவிர விசாரணை மேற்கொண்டனர். அதில், செந்தில் வங்கிக் கணக்கில் இருந்து காஞ்சிபுரத்தை சேர்ந்த ரூசோ என்பவரின் வங்கிக் கணக்கிற்கு அதிகளவில் பண பரிவர்த்தனை நடைபெற்றது தெரியவந்தது.இதனை தொடர்ந்து சென்னை பொருளாதார குற்றப்பிரிவு போலீசார் காஞ்சிபுரம் பகுதி இயக்குனராக செயல்பட்ட ரூசோ என்பவரின் காஞ்சிபுரத்தை அடுத்த செவிலிமேடு வடிவேல் நகர் பகுதியில் உள்ள வீட்டில் சோதனை நடத்தினர்.

இந்த, சோதனையில் அவரது வீட்டில் இருந்த கணக்கில் வராத ரூ8 லட்சம் ரொக்கம் மற்றும் தங்க நகைகள் உள்ளிட்ட முக்கிய ஆவணங்கள் பறிமுதல் செய்யப்பட்டதாக கூறப்படுகிறது. தொடர்ந்து ரூசோவிடம் விசாரணை நடத்திய போலீசார், வழக்குப் பதிவு செய்து அவரை கைது செய்து புழல் மத்திய சிறையில் அடைத்தனர். மேலும், அவரின் வங்கிக் கணக்கில் உள்ள ரூ1 கோடியே 40 லட்சம் முடக்கப்பட்டுள்ளது.

10 கோடி மதிப்பில் புதிய வீடு

ஆருத்ரா கோல்டு நிதி நிறுவன வழக்கில் கைது செய்யப்பட்டுள்ள ரூசோ, வெற்றி ஐஏஎஸ் அகாடமி என்ற பயிற்சி மையம் நடத்தி வருகிறார். மேலும், இவர் புதிதாக ஆர்.கே.சுரேஷ் இயக்கும் படத்தை தயாரித்து, அந்தப் படத்தில் போலீஸ் எஸ்பி வேடத்தில் கதாநாயகனாக நடித்து வருகிறார். இந்த படம் முடிவடையாத நிலையில் திடீரென சொகுசு கார்கள் வாங்கியதும், ரூ10 கோடி மதிப்பீட்டில் புதிய வீடு கட்டியதும் தெரியவந்ததால், சென்னை பொருளாதார குற்றப்பிரிவு போலீசார் அவரது வீட்டில் சோதனை மேற்கொண்டதாகவும் தெரிகிறது.

Related Stories: