திராவிடத்தால் விளைந்தது தான் சமூக மாற்றம்: நூல் வெளியீட்டு விழாவில் முதல்வர் மு.க.ஸ்டாலின் பேச்சு

சென்னை: சென்னை அண்ணா நூற்றாண்டு நூலகத்தில் நேற்று நடைபெற்ற கலைஞர் மு.கருணாநிதி வரலாறு மற்றும் திராவிடமும் சமூக மாற்றமும் நூல் வெளியீட்டு  விழாவில் தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் கலந்து கொண்டார். நூல்களை வெளியிட்டு முதல்வர்  மு.க.ஸ்டாலின் பேசியதாவது: தலைசிறந்த பத்திரிகையாளர்களில் ஒருவரான ஏ.எஸ்.பன்னீர்செல்வன் எழுதி, பென்குயின் வெளியிட்டிருக்கக் கூடிய புத்தகம் கலைஞர் மு. கருணாநிதி வரலாறு. பொருளாதார அறிஞர் ஜெயரஞ்சன் எழுதி, கயல்-கவின் பதிப்பகம் வெளியிட்ட புத்தகம் தான்  திராவிடமும் சமூக மாற்றமும். இந்த இரண்டு புத்தகங்களின் தமிழ் மொழிபெயர்ப்பு வெளியிடப்பட்டிருக்கிறது.  

இவை இரண்டையும் புத்தகங்கள் என்றல்ல ‘அறிவுக்  கருவூலங்கள்’ என்று தான் சொல்ல வேண்டும்.  சோஷியல் மீடியா வளர்ந்து வந்த இந்த நேரத்தில் திமுக மீதான பொய்யான  தாக்குதலை தடுத்த மாபெரும் கேடயம்தான் ஜெயரஞ்சன். அதனால்தான் மாநில திட்டக் குழுவினுடைய துணைத் தலைவராக அவரை  அரசின் சார்பிலே நியமித்தோம். ஏ.எஸ்.பன்னீர்செல்வன் ஆங்கிலத்தில் எழுதிய நூலை கலைஞர் மு.கருணாநிதி வரலாறு என்ற தலைப்பில் சந்தியா நடராசன் சிறப்பாக மொழிபெயர்த்திருக்கிறார். இளையபாரதியின்  வ.உ.சி. நூலகம் இதனை அழகாக வெளியிட்டுள்ளது.

திராவிட இயக்கத்தின் எழுச்சியை ஒருவர் அறிய வேண்டுமா? கலைஞரைப் பற்றிப் படித்தால்  மட்டுமே போதும். தலைவர் கலைஞர் பல்லாயிரக்கணக்கான தனிமனிதர்களோடு தனது  தனிப்பட்ட உறவைப் பேணி வளர்த்து வந்திருக்கிறார், ஒவ்வொருவருக்கும் கலைஞரைப் பற்றிச் சொல்ல ஒரு கதை இருக்கிறது என்கிறார். தான் இல்லாத பிறகும் தான் நினைக்கப்பட வேண்டும் என்பதுதான் கலைஞர்  விரும்பிய வாழ்க்கையாக இருக்கக்கூடியது. அதற்கான உழைப்பைத் தான்  அவர் தன் வாழ்நாள் முழுவதும் அளித்தார். இந்நூலை எழுதியமைக்காக ஏ.எஸ்.பன்னீர்செல்வனுக்கு தனிப்பட்ட முறையில் என்னுடைய  பாராட்டுதல்களை தெரிவித்துக் கொள்கிறேன்.

தமிழ்நாட்டின் வளர்ச்சியின் வழியாக திராவிட இயக்கத்தைப் பார்க்கக்கூடிய  நூலாக ஜெயரஞ்சன்  நூலும் அமைந்திருக்கிறது. தான் இதுவரை எழுதிய சில  கட்டுரைகளை மொழிபெயர்த்து ‘திராவிடமும், சமூக மாற்றமும்’ என்ற தலைப்பில்  ஜெயரஞ்சன் புத்தகமாக கொண்டு வந்துள்ளார். திராவிடமும் சமூக மாற்றமும் என்பது இந்த புத்தகத்தின்  தலைப்பு. திராவிடம் என்றாலே சமூக மாற்றம் தான். சமூக மாற்றம் என்றாலே அது  திராவிடத்தால் விளைந்தது தான். கல்வியில், தொழிலில், உள்கட்டமைப்பில், சிந்தனையில்  மட்டுமல்ல, சமூகத்திலும் சேர்த்து வளர்வதுதான் உண்மையான வளர்ச்சி என்று  சொல்லி இருக்கிறோம்.

கலைஞர் பாணி சமூகநீதிக்கும் - மதச்சார்பின்மைக்கும் - சுயமரியாதைக்கும் -  மாநில சுயாட்சிக்கும் - மொழி இன உரிமைக்கும் ஆற்றல் என்றும் அற்றுப் போகாது  என்பதன் அடையாளம் தான் இன்றைய திராவிட மாடல் ஆட்சி. ஆற்றல் அற்றுப்  போய்விடவில்லை என்பதன் அடையாளம் தான் இத்தகைய புத்தகங்கள். சுயமரியாதை -  சமதர்ம அரசியலை எந்நாளும் உயர்த்திப் பிடிப்போம். இவ்வாறு முதல்வர் மு.க.ஸ்டாலின் கூறினார். இந்நிகழ்ச்சியில் அமைச்சர்கள் துரைமுருகன், தங்கம் தென்னரசு,  மா.சுப்பிரமணியன், கனிமொழி எம்.பி. உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.

Related Stories: