கிறிஸ்துமஸ் பண்டிகை தலைவர்கள் வாழ்த்து

சென்னை: கிறிஸ்துமஸ் பண்டிகை இன்று கொண்டாப்படுகிறது. இதையொட்டி பல்வேறு அரசியல் கட்சி தலைவர்கள் வாழ்த்து தெரிவித்துள்ளனர். தமிழக ஆளுநர் ஆர்.என்.ரவி: அமைதி மற்றும் நல்லிணக்கத்திற்காக அன்புடனும், இரக்கத்துடனும் பூமியை ஆசீர்வதித்த ஆண்டவர் இயேசு கிறிஸ்துவின் பிறப்பை கிறிஸ்துமஸ் விழாவாக கொண்டாடப்படுகிறது. அவருடைய மன்னிப்புச் செய்தி மனிதகுலத்திற்கான விலைமதிப்பற்ற பரிசாகும். கிறிஸ்துமஸ் பண்டிகை நம் அனைவருக்கும் ஆரோக்கியம், மகிழ்ச்சி மற்றும் நல்லிணக்கத்தைக் வழங்கட்டும்.

அதிமுக இடைக்கால பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி: கவலைகள் மறந்து, இன்பம் புகுந்து, நண்பர்கள், உறவினர்கள் உள்ளிட்ட அனைவரிடத்திலும் அன்பு காட்டி, இறைவனின் தூதுவராக, கருணையின் வடிவமாக விளங்கிய இயேசுபிரான் பிறந்த இத்திருநாளில், அவர் போதித்த அன்பு, எளிமை, கருணை போன்ற உயரிய குணங்களை மக்கள் அனைவரும் பின்பற்றி, சகோதரத்துவத்துடன் ஒற்றுமையாக வாழ வேண்டும்.

காங்கிரஸ் தலைவர் கே.எஸ்.அழகிரி: சிறந்த மனிதாபிமான உணர்வோடும், சேவை மனப்பான்மையோடும் வாழ்ந்து வருகிற கிறிஸ்துவ சகோதர, சகோதரிகளுக்கு வாழ்த்துகள். ஆனால் கிறிஸ்துவ சமுதாயம் உள்ளிட்ட சிறுபான்மையின மக்கள் மீது அடக்குமுறையை ஏவி, அச்சுறுத்தப்படுகிற சூழல் உருவாகியிருக்கிறது.

மதிமுக பொதுச்செயலாளர் வைகோ: இயேசு பெருமான், தான் சித்திரவதைக்கு உள்ளானபோதும், சிலுவையில் அறையப்பட்டு இரத்தம் சிந்தியபோதும், தன்னைக் கொடுமைப்படுத்தியவர்களுக்காகவும் இரக்கம் காட்டிய உன்னதமான தியாகம் இப்பூவுலகத்துக்கு வழிகாட்டுகின்ற ஒளியாகவே பிரகாசிக்கின்றது.இயேசு கிறிஸ்து போதித்த மனிதநேய நெறிகளைப் போற்றிப் பின்பற்றவும், சாதி-சமய வேற்றுமைகளைக் கடந்து சகோதரத்துவம் தமிழகத்தில் மேலோங்கவும் கிறிஸ்துமஸ் திருநாளில் உறுதி கொள்வோம்.

பாமக நிறுவனர் ராமதாஸ்: ஏழை, எளிய மக்கள் புதுவாழ்வு பெற வேண்டும், இயற்கையை சுரண்டாமல் இசைந்து வாழும் தன்மை ஏற்பட வேண்டும். மனிதர்களுக்கு மன்னிக்கக் கற்றுக் கொடுத்த மகான் இயேசு கிறித்துவின் பிறந்தநாளை கிறித்துமஸ் திருநாளாக கொண்டாடும் சகோதரர்கள் அனைவருக்கும் வாழ்த்துகள்.

பாமக தலைவர் அன்புமணி: இயேசு விரும்பிய அமைதி, கருணை, வளம், ஒற்றுமை, மகிழ்ச்சி, சகோதரத்துவம், நல்லிணக்கம் உள்ளிட்ட அனைத்தும் பெருகுவதற்காக உழைக்க உறுதியேற்போம்.

தமாகா தலைவர் ஜி.கே.வாசன்: ஒன்றிய, மாநில அரசுகள் கிறிஸ்தவ மக்களின் கல்வி, வேலைவாய்ப்பு, தொழில் உள்ளிட்ட பலவற்றில் அவர்களுக்காக பல்வேறு நலத்திட்டங்களை செயல்படுத்தி, உறுதுணையாக இருக்க வேண்டும். இயேசு கிறிஸ்துவின் ஆசியோடு கிறிஸ்தவர்கள் வாழ்வில் நலமுடன், வளமுடன், மகிழ்வுடன் வாழ வேண்டும்.

அமமுக பொதுச்செயலாளர் டிடிவி தினகரன்: அன்பே கடவுள் என்பது போன்ற இயேசுபிரானின் நல்வார்த்தைகள், மக்களின் மீது அனைவரையும் அன்பு செலுத்த வைப்பவை. இயேசுநாதரின் சொற்களை மனதில் நிறுத்தி அனைவரிடமும் அன்பு செலுத்திடுவோம்.

விசிக தலைவர் திருமாவளவன்: சகோதரத்துவத்தின் மீது நம்பிக்கையுள்ள அனைவருக்கும் இனிய கிறிஸ்துமஸ் வாழ்த்துகள்.

தமிழக வாழ்வுரிமை கட்சி தலைவர் வேல்முருகன், சமத்துவ மக்கள் கட்சி தலைவர் சரத்குமார், பெருந்தலைவர் மக்கள் கட்சி தலைவர் என்.ஆர்.தனபாலன், சமத்துவ மக்கள் கழகத் தலைவர் எர்ணாவூர் நாராயணன், தேசிய முன்னேற்ற கழக தலைவர் ஜி.ஜி.சிவா, கோகுல மக்கள் கட்சி தலைவர் எம்.வி.சேகர், தமிழ்நாடு முஸ்லிம் லீக் தலைவர் வி.எம்.எஸ்.முஸ்தபா, இந்திய குடியரசு கட்சி தலைவர் செ.கு.தமிழரசன், புரட்சி பாரதம் கட்சி தலைவர் ஜெகன்மூர்த்தி,

புதிய நீதிக்கட்சி தலைவர் ஏ.சி.சண்முகம், இந்திய தேசிய ரியல் எஸ்டேட் பில்டர்ஸ் லேண்ட் டெவலப்பர்ஸ் மற்றும் நிலத்தரகர்கள் நலச்சங்க தலைவர் விருகை கண்ணன், அகில இந்திய ரியல் எஸ்டேட் வர்த்தகர்கள் மற்றும் முகவர்கள் நலச்சங்க கூட்டமைப்பின் தலைவர் ஏ.ஹென்றி, திராவிட மனித சங்கிலி இயக்க தலைவர் செங்கை பத்மநாபன் ஆகியோரும் வாழ்த்து தெரிவித்துள்ளனர்.

Related Stories: