மாவட்ட செயலாளர் சிவபத்மநாதன் முயற்சியால் பாவூர்சத்திரம் வாரசந்தையில் வியாழன்தோறும் மாட்டுசந்தை-வியாபாரிகள் மகிழ்ச்சி

பாவூர்சத்திரம் :  பாவூர்சத்திரத்தில் திமுக மாவட்ட செயலாளர் முயற்சியால் வியாழன்தோறும் மாட்டுச்சந்தை நடைமுறைக்கு வந்தது. இதனை முன்னிட்டு வெளிமாவட்டத்தில் இருந்து லாரிகள் மூலம் மாடுகள் கொண்டு வந்து விற்பனை செய்யப்பட்டது. இதனால் வியாபாரிகள் மத்தியில் மகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

கீழப்பாவூர் யூனியனுக்குட்பட்ட வாரச்சந்தை பல ஆண்டுகளாக செயல்பட்டு பாவூர்சத்திரத்தில் வருகிறது. இதில் விவசாயிகள் தங்களுடைய விளைபொருட்கள் விற்பனை செய்து வந்தனர். வியாபாரிகள் பலசரக்கு மற்றும் கருவாடு, பாய் போன்ற சந்தை பொருட்களும் விற்பனை செய்தனர். அதேபோன்று வாரச்சந்தையில் இதுவரை கோழி, ஆடுகள் மட்டும் விற்பனை செய்யப்பட்டு வந்தது.

ஆனால், கடந்த சில வாரங்களுக்கு முன் புதன்கிழமை தோறும் மாட்டு சந்தை தொடங்கியது. ஆனால், பொதுமக்களுக்கு அதிகம் தெரியாததால் போதுமான அளவில் கூட்டமில்லை. இதனால் மாடுகள் வாங்க, விற்க வரும் வியாபாரிகள் வருகை குறைவாக இருந்தது. இது தொடர்பாக திமுக மாவட்ட செயலாளர் சிவபத்மநாதன் கவனத்திற்கு செல்லப்பட்டது. இதை தொடர்ந்து வழக்கம் போல் செயல்பட்டு வந்த வியாழக்கிழமை சந்தை நாளில் மாட்டுசந்தை செயல்பட யூனியன் அதிகாரிகள் பேச்சுவார்த்தை நடத்தினர்.

இதைதொடர்ந்து வியாழன்தோறும் மாட்டு சந்தை செயல்பட அனுமதி அளித்தனர்.  இதனைத்தொடர்ந்து நேற்று முதல் மாட்டுசந்தை தொடங்கியது. இதில் கீழப்பாவூர் வட்டாரப்பகுதியில் இருந்தும், மதுரை உள்ளிட்ட வெளிமாவட்டத்தில் இருந்தும் வியாபாரிகள் லாரிகள் மூலமாக மாடுகளை கொண்டு வந்து விற்பனை செய்தனர். நேற்று நடைபெற்ற மாட்டுசந்தையில் 500க்கும் மேற்பட்ட மாடுகள் விற்பனை செய்யப்பட்டதாக வியாபாரிகள் தெரிவித்தனர். மாட்டு சந்தைக்கு ஏற்பாடு செய்த மாவட்ட திமுக செயலாளர் சிவபத்மநாதனுக்கு வியாபாரிகள்  நன்றியையும், மகிழ்ச்சியையும் தெரிவித்து கொண்டனர்.

Related Stories: