கோவையில் வியாபாரியிடம் 5 டிவி, ரூ.47 ஆயிரம் பணம் பறித்த போலீஸ்காரர் உட்பட 2 பேர் கைது-வாலிபரை ஒர்க்‌ஷாப்பில் கட்டி வைத்ததும் அம்பலம்

கோவை :  கோவையில் வாலிபரிடம் 5 டிவிக்கள் மற்றும் பணம் பறித்த போலீஸ்காரர் உட்பட 2 பேர் கைது செய்யப்பட்டனர்.கோவை மசக்காளிபாளையம் அருகே உள்ள வரதராஜபுரம் பகுதியை சேர்ந்தவர் தாஸிம் (27). இவர் டிவி மற்றும் காஸ் ஸ்டவ் வியாபாரம் செய்து வருகிறார். நேற்று முன்தினம் இரவு இவர் கண்ணம்பாளையம் பகுதியில் ஒரு டிவியை எடுத்துக்கொண்டு இரு சக்கர வாகனத்தில் சென்று கொண்டிருந்தார். இவருடன் இவரது நண்பர் ஷாருக் (27) என்பவரும் இருந்தார். அப்போது கண்ணம்பாளையம் பகுதியில் ஒரு பேக்கரி முன்பு சூலூர் போலீஸ் நிலையத்தில் போலீஸ்காரராக பணியாற்றி வரும் முருகன் (34), மற்றும்  பள்ளபாளையம் பகுதியைச் சேர்ந்த ஆம்புலன்ஸ் டிரைவர் பிரதீஸ் (27) ஆகியோர் நின்று கொண்டிருந்தனர்.

அவர்கள் தாஸிமையும், ஷாரூக்கையும் தடுத்து நிறுத்தினர். தாஸிமிடம் எதற்காக இந்த டிவியை எடுத்து சென்று கொண்டிருக்கிறாய்?, இது யாருடையது?, டிவியை திருடி செல்கிறாயா? என முருகன் கேட்டார். அப்போது தாஸிம், ‘‘இந்த டிவி எனக்கு சொந்தமானது.‌ நான் டிவி மற்றும் காஸ் ஸ்டவ் விற்பனை செய்து வருகிறேன்’’ என தெரிவித்தார். இதை ஏற்காத முருகன் மற்றும் பிரதீஷ் ஆகிய இருவரும் சேர்ந்து, ‘‘பொய் சொன்னால் விட மாட்டோம். உன் கடை எங்கே என காட்டு’’ எனக்கூறினர்.

மேலும் அவருடன் இருந்த ஷாருக்கை பக்கத்தில் இருந்த ஒர்க் ஷாப்பில் கயிறு போட்டு கட்டி வைத்தனர். பின்னர் தாஸிமை வாகனத்தில் ஏற்றி அவரது கடை மற்றும் வீட்டை காட்ட சொல்லி அழைத்து சென்றனர். தாஸிம், வரதராஜபுரத்தில் உள்ள தனது வீட்டிற்கு அழைத்து சென்றார். அப்போது 5 டிவிக்கள் மற்றும் ஒரு காஸ் ஸ்டவ் இருந்தது. இதை பார்த்த முருகன், பிரதீஸ் ஆகியோர் இவற்றை மிரட்டி பறித்தனர். தாஸிம் வீட்டில் வைத்திருந்த 47 ஆயிரம் ரூபாயையும் மிரட்டி பறித்து கொண்டனர்.

இந்த விவரங்களை வெளியே சொல்லக்கூடாது. மீறினால் கொலை செய்து விடுவேன் என முருகன் மிரட்டி சென்றார். ஒர்க் ஷாப்பில் பிணைய கைதி போல் பிடித்து வைத்திருந்த ஷாருக்கை முருகன் விடுவித்தார்.  இது தொடர்பாக தாஸிம் சிங்காநல்லூர் போலீசில் புகார் அளித்தார் ‌ போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தினர். முருகனிடம் விசாரித்தபோது அவர் தாஸிடம் பறிமுதல் செய்த 5 டிவிக்கள், காஸ் ஸ்டவ் இருந்தது.

இவற்றை போலீசார் மீட்டனர். பின்னர் முருகன் மற்றும் பிரதீஸ் ஆகியோரை கைது செய்தனர்.

 இவருக்கு உதவிய ஒர்க் ஷாப்பில் ஷாருக்கை கயிறு போட்டு கட்டி வைக்க உதவிய போலீஸ்காரர் முருகனின் நண்பரான ஸ்ரீஜித் (28) என்பவரை போலீசார் தேடி வருகின்றனர். போலீஸ்காரர் முருகன் கடந்த 2016ம் ஆண்டு பணியில் சேர்ந்துள்ளார்.

இவர் சில மாதங்கள் மதுக்கரை நீலம்பூர் பைபாஸ் ரோட்டில் ரோந்து பணியில் ஈடுபட்டு வந்தார். அப்போது பலரை இதுபோல் மிரட்டி பணம், பொருட்கள் வசூலித்துள்ளதாக கூறப்படுகிறது. இது தொடர்பாகவும் போலீசார் விசாரித்து வருகின்றனர். பணம், டிவிக்களை பறித்த முருகன் மீது விரைவில் சஸ்பெண்ட் நடவடிக்கை எடுக்கப்படவுள்ளது.

Related Stories: