மாவட்ட செயலாளர்கள் கூட்டத்தில் ஒருமையில் பேசியதன் எதிரொலி; அதிமுக கொடி, சின்னத்தை ஓபிஎஸ் பயன்படுத்த கூடாது: எடப்பாடி தரப்பு திடீர் எச்சரிக்கை

சென்னை:  அதிமுகவில் ஓ.பன்னீர்செல்வம் - எடப்பாடி பழனிசாமி ஆகியோர் தொடர்ந்து மோதல் போக்கை கடைபிடித்து வருகின்றனர். தமிழகத்தில் இருவரும் தனித்தனியாக கட்சி நிர்வாகிகளை நியமித்து செயல்பட்டு வருகின்றனர். இந்நிலையில், ஓ.பன்னீர்செல்வம் நேற்று முன்தினம் சென்னையில் தனது ஆதரவு மாவட்ட செயலாளர்கள் மற்றும் தலைமை கழக நிர்வாகிகள் கூட்டத்தை கூட்டினார். அப்போது பேசிய ஓ.பன்னீர்செல்வம், எடப்பாடி பழனிசாமியை ஒருமையில் பேசியது பரபரப்பை ஏற்படுத்தியது.

குறிப்பாக, ‘அதிமுக கட்சி தொண்டர்களுக்காக ஆரம்பிக்கப்பட்ட கட்சி. நீ (எடப்பாடி) வேண்டுமானால் தனிக்கட்சி தொடங்கி பாரு, அப்போது தெரியும் உனது செல்வாக்கு. எம்ஜிஆரிடம் பேசி இருக்கிறாயா, ஒன்றிய பாஜ அரசில் தனது மகனுக்கு கிடைக்க இருந்த அமைச்சர் பதவியை கெடுத்தது எடப்பாடி’ என்று பல்வேறு குற்றச்சாட்டுகளை ஓபிஎஸ் கூறினார். இதனால் எடப்பாடி அணியினர் எரிச்சல் அடைந்துள்ளனர்.

இந்நிலையில், எடப்பாடி பழனிசாமி தரப்பில் இருந்து ஓ.பன்னீர்செல்வத்துக்கு நேற்று அதிமுக வழக்கறிஞர்கள் மூலம் ஒரு நோட்டீஸ் அனுப்பி வைக்கப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது. அந்த கடிதத்தில், ‘அதிமுக இடைக்கால பொதுச்செயலாளராக எடப்பாடி பழனிசாமி கடந்த ஜூலை மாதம் 11ம் தேதி நடைபெற்ற பொதுக்குழுவில் தேர்வு செய்யப்பட்டுள்ளார். அதிமுக கட்சியில் தற்போது ஒருங்கிணைப்பாளர், இணை ஒருங்கிணைப்பாளர் பதவி ரத்து செய்யப்பட்டுள்ளது.

இதற்கு அதிமுக பொதுக்குழு அங்கீகாரம் அளித்துள்ளது. இதையும் மீறி நீங்கள் (ஓபிஎஸ்) அதிமுக ஒருங்கிணைப்பாளர் என்று கூறிக் கொள்வதுடன், அதிமுகவின் அதிகாரப்பூர்வ லெட்டர் பேட், கட்சி சின்னம், கொடி ஆகியவற்றையும் பயன்படுத்தி வருகிறீர்கள். அதிமுக கட்சியில் இருந்தும், பொருளாளர் பதவியில் இருந்தும் நீக்கப்பட்டுள்ளீர்கள். இதற்கு பொதுக்குழு அங்கீகாரம் அளித்துள்ளது.

இதையும் மீறி அதிமுக கட்சி கொடி மற்றும் இரட்டை இலை சின்னம், லெட்டர் பேட் ஆகியவற்றை பயன்படுத்தி வருவதால் உங்கள் மீது ஏன் சட்டப்படி நடவடிக்கை எடுக்க கூடாது. இதற்கான விளக்கம் அளிக்க வேண்டும்’’ என்று கடிதத்தில் கூறப்பட்டுள்ளது. ஆனால், இந்த கடிதம் அதிமுக கட்சி தலைமை அலுவலகம் சார்பில்தான் அனுப்பி வைக்கப்பட்டதா என்ற தகவல் வெளியாகவில்லை. அதிமுக லெட்டர் பேட்டில் இல்லாமல் இந்த கடிதம் வெளியாகியுள்ளது குறிப்பிடத்தக்கது. இதனால், இந்த கடிதத்துக்கு ஓ.பன்னீர்செல்வம் தரப்பில் இருந்து பதில் அனுப்பி வைக்கப்படுமா என்பதும் கேள்விக்குறி.

Related Stories: