பங்குனி உத்திர திருவிழா நெருங்குவதால் திருவாலங்காடு தேர் மண்டபம் சீரமைக்க பக்தர்கள் கோரிக்கை

திருத்தணி: திருவள்ளூர் மாவட்டம் திருத்தணி அடுத்த திருவாலங்காட்டில் வடாரண்யேஸ்வரர் சமேத வண்டார்குழலி அம்மன் கோயில் உள்ளது. இங்கு கோயிலில் சிவபெருமானுக்கு ஐம்பெரும் சபைகளில் முதல் சபையாக இரத்தின சபை இருந்து பக்தர்களுக்கு சிவபெருமான் காட்சி அளித்து வருகிறார். கோயிலில் ஆண்டுதோறும் தெப்பத் திருவிழா, ஆருத்ரா தரிசனம் உள்ளிட்ட பல்வேறு விழாக்கள் சிறப்பாக நடத்தப்படுகிறது. பங்குனி உத்திர நட்சத்திர விழாவின்போது கமலதேரில் சுவாமி இணை தேர் வீதியில் வலம்வந்து பக்தர்களுக்கு காட்சி அளிப்பார்.

திருவாலங்காடு பஸ் நிறுத்தம் அருகே தேர்த் நிறுத்தம் பகுதியில் கோயில் தேரை மூடி பத்திரமாக பாதுகாத்து வருகின்றனர். இந்த நிலையில், கொரோனா தொற்று நோய் காரணமாக பங்குனி உத்திர திருவிழா நடைபெறவில்லை. ஆனால் இந்தாண்டு பங்குனி உத்திர திருவிழா தொடங்கப்பட உள்ளது. ஆனால் தற்போது தேர் மண்டபத்தை சுற்றிலும் காட்டுச்செடிகள் வளர்ந்துள்ளது. இந்த இடத்தில் சமூகவிரோதிகள் மது அருந்தும் பாராக மாற்றிவிட்டனர். இதற்கு காரணம் அந்த பகுதியில் போதிய விளக்கு வசதி கிடையாது.

இதுகுறித்து கோயில் நிர்வாகத்துக்கு பலமுறை மக்கள் புகார் தெரிவித்தும் தேர் உள்ள பகுதியை தூய்மைப்படுத்தவும் சீரமைக்கவும் எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை. மாறாக அந்த பணிகளை மேற்கொள்வதற்காக உபயதாரரை தேடுவதாக பக்தர்கள் குற்றம் சாட்டுகின்றனர். எனவே, மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலை உறுதி திட்டத்தின் கீழ் பணிபுரியும் பணியாளர்களை கொண்டு சீரமைக்க வேண்டும் என்று திருவள்ளூர் மாவட்ட கலெக்டர் ஆல்பி ஜான் வர்கீஸிடம் மக்கள் கோரிக்கை வைத்துள்ளனர்.

Related Stories: