பீகார் கள்ளச்சாராய உயிரிழப்பு விவகாரம்; பாஜக ஆளும் மாநிலங்களுக்கு ஆணையம் செல்லாதது ஏன்?.. 14 எதிர்க்கட்சிகள் இணைந்து கூட்டறிக்கை..!

டெல்லி: பீகார் மாநிலம் சரண் மாவட்டத்தில் கள்ளச்சாராயம் குடித்து 38 பேர் உயிரிழந்தது தொடர்பாக காங்கிரஸ், திமுக, திரிணாமுல் காங்கிரஸ், இந்திய கம்யூனிஸ்ட், மார்சிஸ்ட் கம்யூனிஸ்ட் உள்ளிட்ட 14 எதிர்க்கட்சிகள் இணைந்து கூட்டறிக்கை வெளியிட்டுள்ளன. கள்ளச்சாராய உயிரிழப்பு விவகாரத்தை ஒன்றிய அரசு பாஜக ஆளும் மாநிலங்களில் ஒருவிதமாகவும், எதிர்க்கட்சிகள் ஆளும் மாநிலங்களில் மற்றோரு விதமாக கையாள்வதாக எதிர்க்கட்சிகள் குற்றம் சாட்டியுள்ளன.

பீகாரின் சரண் மற்றும் சிவன் மாவட்டங்களுக்கு தேசிய மனித உரிமை ஆணையம் அனுப்பி வைக்கப்பட்டது போல பாஜக ஆளும் மாநிலங்களில் கள்ளச்சாராயம் குடித்து பலர் உயிரிழந்த போது ஏன் அனுப்பப்படவில்லை என்றும் எதிர்க்கட்சிகள் கேள்வி எழுப்பியுள்ளன. பீகாரில் 2016 முதல் 2021 வரை ஐக்கிய ஜனதா தளம் பாஜக கூட்டணி அரசு இருந்தவரை கள்ளச்சாராய உயிரிழப்புகள் 200க்கும் அதிகமாக பதிவாகின. ஆனால் அப்போதெல்லாம் அனுப்பப்படாத தேசிய மனித உரிமைகள் ஆணையம் கூட்டணி முறிந்த பிறகு தற்போது அனுப்பப்பட்டு இருப்பதாக கண்டனம் தெரிவித்துள்ளனர்.

குஜராத்தில் ஜூலை மாதத்தில் மட்டும் கள்ளச்சாராயம் குடித்து 45 பேர் உயிரிழந்துள்ளனர். உத்தரப்பிரதேசத்தில் மே மாதம் 36 பேரும், ஹரியானாவில் கடந்த ஆண்டு நவம்பரில் 40 பேரும், மத்தியப்பிரதேசத்தில் கடந்த ஆண்டு ஜனவரியில் 24 பேரும் கள்ளச்சாராயம் குடித்து உயிரிழந்துள்ளனர். நாடு முழுவதும் 2021ம் ஆண்டில் மட்டும் 782 பேர் கள்ளச்சராயம் குடித்து உயிரிழந்துள்ளனர். அதில் மத்தியப்பிரதேசத்தில் 108 பேரும், கர்நாடகாவில் 104 பேரும் உயிரிழந்திருப்பது ஒன்றிய அரசு நாடாளுமன்றத்தில் அளித்த விவரங்கள் மூலம் தெரிய வருகிறது. ஆனால் பாஜக ஆளும் இம்மாநிலங்களுக்கு தேசிய மனித உரிமைகள் ஆணையம் செல்லவில்லை.

தற்போது பீகாருக்கு மட்டும் சென்று விசாரணை நடத்திருப்பது அரசியல் உள்நோக்கம் கொண்டது என எதிர்க்கட்சிகள் குற்றம் சாட்டியுள்ளன. அமலாக்கத்துறை, சிபிஐ, வருமான வரித்துறையை தொடர்ந்து தேசிய மனித உரிமைகள் ஆணையத்தையும் எதிர்க்கட்சிகளை ஒடுக்கும் கருவியாக ஒன்றிய அரசு பயன்படுத்த தொடங்கி விட்டதையே இவை காட்டுவதாகவும் எதிர்க்கட்சிகள் சாடியுள்ளன.

Related Stories: