ராயபுரம் தொகுதியில் சத்துணவு கூடம், பூங்காவில் மேயர் பிரியா திடீர் ஆய்வு; பொதுமக்களின் கோரிக்கைகளை நிறைவேற்றுவதாக உறுதி

தண்டையார்பேட்டை: ராயபுரம் தொகுதியில் பள்ளி சத்துணவு கூடம் மற்றும் பூங்காவில் மேயர் பிரியா, எம்எல்ஏ ஐட்ரீம் மூர்த்தி ஆகியோர் அதிகாலையில் ஆய்வு செய்து, பொதுமக்களிடம் குறைகளை கேட்டறிந்தனர். ராயபுரம் தொகுதியில் உள்ள பல்வேறு இடங்களில் சென்னை மாநகராட்சி மேயர் பிரியா நேற்று அதிகாலை திடீரென ஆய்வு மேற்கொண்டார். அவருடன் சட்டமன்ற உறுப்பினர் ஐட்ரீம் மூர்த்தி, மாவட்ட திமுக செயலாளர் தா.இளைய அருணா, மாநகராட்சி கல்வி அதிகாரி சினேகா, வடக்கு மண்டல கூடுதல் ஆணையர் சிவகுரு பிரபாகரன், ராயபுரம் மண்டல அதிகாரி தமிழ்ச்செல்வன், மண்டல குழு தலைவர் ஸ்ரீராமுலு உள்பட பலர் சென்றனர். சூரிய நாராயணா தெருவில் பள்ளி மாணவர்களுக்கு காலை உணவு தயாராகும் சமையல் கூடத்தை பார்வையிட்டார். அங்கு சமைக்கப்பட்ட உணவை ருசி பார்த்தார். மேலும் பணியாளர்களிடம் ஏதேனும் பிரச்னைகள் உள்ளதா என்பதுபற்றி கேட்டறிந்தார்.

பனைமரத் தொட்டி பகுதியில் உள்ள மாநகராட்சி அலுவலகத்தில் அதிரடியாக ஆய்வு செய்தார். அப்போது, துப்புரவு பணியாளர்கள், மற்ற துறை அதிகாரிகள் சரியான நேரத்திற்கு பணிக்கு வந்துள்ளனரா என்பது குறித்து ஆய்வு செய்தார். பின்னர் ஆர்எஸ்ஆர்எம் மருத்துவமனை எதிரில் உள்ள அண்ணா பூங்காவில் ஆய்வு மேற்கொண்டார். அங்கு சென்னை 2.0 திட்டத்தில் நடந்து வரும் 2.01 கோடி செலவில் அண்ணா பூங்கா  மறு சீரமைப்பு பணிகளை பார்வையிட்டார். அப்போது பொதுமக்கள் அவரிடம் பல்வேறு கோரிக்கைகள் வைத்தனர். குடிப்பதற்கு தண்ணீர் வேண்டும், பேட்மின்டன் கோர்ட் அதிகப்படுத்த வேண்டும், பெண்களுக்கு ஜிம் அமைத்து தர வேண்டும், ஒன்பதரை மணிக்கு மேல் சமூக விரோதிகள் உள்ளே வருவதால் அதை தடுக்க பாதுகாப்பு காவலர்கள் நியமிக்க வேண்டும் உள்பட பல கோரிக்கைகளை வைத்தனர்.  அதற்கு, கோரிக்கைகளை நிறைவேற்றி தருவதாக மேயர் பிரியா கூறினார்.

தொடர்ந்து, அண்ணா பூங்காவுக்கு சென்றனர். அங்கு, ஐந்து ரூபாய் டாக்டர் ஜெயச்சந்திரன் நினைவஞ்சலி பேனர் வைக்கப்பட்டிருந்தது. அவரது படத்திற்கு மேயர் பிரியா, சட்டமன்ற உறுப்பினர் ஐட்ரீம் மூர்த்தி, திமுக மாவட்ட செயலாளர் தா.இளைய அருணா மரியாதை செய்தனர். அப்போது அங்குள்ள பொதுமக்கள், டாக்டர் ஜெயச்சந்திரன் பெயரை மெட்ரோ ரயில் நிலையத்திற்கு வைக்க கோரிக்கை விடுத்தனர். ஒரு தெருவுக்காவது அவரது பெயரை வைக்க வேண்டும் என்றனர். தொடர்ந்து, அர்த்தூண் சாலையில் உள்ள உருது தொடக்கப் பள்ளியில் குழந்தைகளுக்கு உணவு வழங்கப்படுவதை பார்வையிட்டார்.

அப்போது சிறு குழந்தைகளிடம் சாப்பாடு நல்லா இருக்கிறதா என கேட்டார். பள்ளியில் நிர்பயா திட்டத்தில் கட்டப்படும் கழிவறையையும் பார்வையிட்டார்.

ராயபுரத்தில் உள்ள சென்னை பள்ளிகளில் மேல்நிலைப்பள்ளி இல்லை என்றும் தற்போது தமிழக அரசு புதுமைப்பெண் திட்டத்தின்படி அரசு பள்ளியில் படித்தால்தான் உதவி கிடைக்கும் என்பதால் சென்னை பள்ளிகளில் மேல்நிலை வகுப்புகள் அமைத்து தர சட்டமன்ற உறுப்பினர் ஐட்ரீம் மூர்த்தி கோரிக்கை வைத்தார். அதை அதிகாரிகளின் கவனத்திற்கு எடுத்துச் சென்று பரிசீலிப்பதாக மேயர் கூறினார்.

Related Stories: