தரக்குறைவாக திட்டி ஆசிரியை வீடியோ பதிவிட்டதால் ஆசிரியை தூக்கிட்டு தற்கொலை: மாங்காட்டில் பரபரப்பு

சென்னை: மாங்காட்டில் அரசு பள்ளி ஆசிரியர் தரக்குறைவாக திட்டி, சமூக வலைதளங்களில் வீடியோ பதிவிட்டதால் மனமுடைந்த பள்ளி மேலாண்மை குழு தலைவி தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார். இச்சம்பவம் குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். மாங்காட்டில் அரசு நடுநிலைப்பள்ளியில் 1ம் வகுப்பு முதல் 8ம் வகுப்பு வரை உள்ளது. இதில், ஏராளமான மாணவ, மாணவிகள் பயின்று வருகின்றனர். அதே பள்ளியில் மாங்காடு, அப்பாவு நகரை சேர்ந்த பியூலா (35) என்பவர் பள்ளி மேலாண்மை குழு தலைவியாகவும், இல்லம்தோறும் கல்வி திட்டத்தில் மாணவர்களின் வீடுகளுக்கே சென்று பாடமும் எடுத்து வந்தார்.

பள்ளியில் ஆசிரியர்கள் யாரும் விடுப்பு எடுத்தால், அந்த சமயத்தில் தலைமை ஆசிரியரின் அனுமதியோடு மாணவர்களுக்கு வகுப்பு எடுத்து வந்தார். கடந்த சில தினங்களுக்கு முன் அதே பள்ளியில் ஆசிரியையாக பணியாற்றி வரும் சவுபாக்கியம் (40) என்பவருக்கும், பியூலாவிற்கும் இடையே தகராறு ஏற்பட்டது. அதில் ஆத்திரமடைந்த ஆசிரியை சௌபாக்கியம், பியூலாவை மாணவர்கள் முன்னிலையில் தரக்குறைவான வார்த்தைகளால் திட்டியதாக கூறப்படுகிறது.

இதுகுறித்து, நடவடிக்கை எடுக்க வேண்டி பியூலா நேற்று முன்தினம் மாங்காடு காவல் நிலையத்திலும், காஞ்சிபுரம் மாவட்ட பள்ளி கல்வித்துறை அதிகாரிகளிடமும் புகார் அளித்தார்.

ஆனால், அவரது புகாரின் பேரில் எந்தவித நடவடிக்கையும் எடுக்கவில்லை. இந்நிலையில், நேற்று பள்ளிக்கு வந்த பியூலாவை, சவுபாக்கியம் மீண்டும் தரக்குறைவான வார்த்தைகளால் திட்டினார்.  இதனால், பியூலா, நேராக தனது வீட்டிற்கு வந்து தூக்கு போட்டு தற்கொலை செய்து கொண்டார். இதுகுறித்து மாங்காடு போலீசாருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. தகவல் அறிந்ததும் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்ற போலீசார், பியூலாவின் உடலை மீட்டு, பிரேத பரிசோதனைக்காக குரோம்பேட்டை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.

இதனிடையே, பியூலா தற்கொலை செய்து கொண்ட தகவல் அறிந்ததும் ஆத்திரமடைந்த அவரது உறவினர்கள், ஏராளமானோர் ஒன்று திரண்டு பள்ளிக்கு சென்றனர். அங்கு தலைமை ஆசிரியர் அறையில் இருந்த ஆசிரியை சவுபாக்கியத்தை தாக்க முயன்றதால் பரபரப்பு ஏற்பட்டது. விரைந்து சென்ற மாங்காடு போலீசார், பள்ளி தலைமை ஆசிரியர் மற்றும் ஆசிரியை சவுபாக்கியம் ஆகிய 2 பேரையும் காவல் நிலையம் அழைத்துச் சென்று விசாரித்து வருகின்றனர். பியூலாவின் தற்கொலைக்கு காரணமான ஆசிரியை சவுபாக்கியம் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று அவரது உறவினர்கள் கூறி வருகின்றனர்.

இதனால், சவுபாக்கியத்திடம் தனியாக போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். போலீசாரின் முதல் கட்ட விசாரணையில், பியூலா குறித்து ஆசிரியை சவுபாக்கியம் சமூக வலைதளங்களில் அவதூறாக வீடியோ பதிவிட்டு இருந்தார் என்பதும் அதில் தரக்குறைவான வார்த்தைகளால் அவரை திட்டியிருப்பதும் தெரிய வந்துள்ளது. தொடர்ந்து, விசாரணை நடைபெற்று வருவதாக போலீசார் தெரிவித்தனர். இச்சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. பி யூலா நேற்று முன்தினம் மாங்காடு காவல் நிலையத்திலும், காஞ்சிபுரம் மாவட்ட பள்ளி கல்வித்துறை அதிகாரிகளிடமும் புகார் அளித்தார். ஆனால், அவரது புகாரின் பேரில் எந்தவித நடவடிக்கையும் எடுக்கவில்லை என்று கூறப்படுகிறது.

Related Stories: