தமிழ்நாடு யாதவ மகாசபை தலைவராக நாசே ஜெ.ராமச்சந்திரன் போட்டியின்றி தேர்வு

சென்னை: தமிழ்நாடு யாதவ மகாசபை தலைவராக நாசே ஜெ.ராமச்சந்திரன் போட்டியின்றி தேர்வு செய்யப்பட்டார். தமிழ்நாடு யாதவ மகாசபையின் பொதுக்குழு கூட்டம், தலைவர், பொதுச் செயலாளர் மற்றும் பொருளாளர் தேர்வுக்காக  சென்னை வேப்பேரியில் உள்ள பெரியார் திடலில் நடந்தது. கூட்டத்தில், அனைத்து மாநில, மாவட்ட நிர்வாகிகள், பொதுக்குழு உறுப்பினர்கள் கலந்து கொண்டனர். தேர்தல் அதிகாரியாக நியமிக்கப்பட்ட வழக்கறிஞர் சுந்தரம் தலைமையிலான குழு தேர்தல் முடிவை அறிவித்தனர். தேர்தலில், தமிழ்நாடு யாதவ மகாசபை தலைவராக நாசே ஜெ.ராமச்சந்திரனும், பொதுச் செயலாளராக வேல் மனோகர், பொருளாளராக எத்திராஜும் தேர்வாகினர். இவர்கள், வெற்றி பெற்றதற்கான சான்றிதழ்கள் வழங்கப்பட்டது. இதையடுத்து, வெற்றி பெற்ற நிர்வாகிகளுக்கு வாழ்த்து தெரிவிக்கப்பட்டது.

கூட்டத்தில் நிறைவேற்றப்பட்ட தீர்மானங்கள் வருமாறு: உயர்சாதி வகுப்பினருக்கு பொருளாதார அடிப்படையில் 10 சதவீத இட ஒதுக்கீட்டை உச்ச நீதிமன்றம் உறுதி செய்ததை எதிர்த்து சீராய்வு மனு செய்த தமிழக அரசை ஆதரிக்கிறோம். தமிழக அரசு கால்நடை வாரியம் விரைவாக அமைத்து கால்நடை வாரியத்திற்காக யாதவ இனத்தை சேர்ந்தவரை நியமிக்க வேண்டும். திருநெல்வேலியில் சமீபத்தில் நடந்த சாதிய படுகொலைகள் தொடர்பாக கொலையாளிகள் பிடித்து தண்டிக்கப்பட்டனர். பாதிக்கப்பட்ட குடும்பத்தினருக்கு உரிய நிவாரணம் வழங்க வேண்டும்.

தமிழகத்தில் உடனடியாக சாதிவாரி கணக்கெடுப்பு நடத்தி விகிதாச்சார அடிப்படையில் இட ஒதுக்கீடு வழங்கவும் தமிழக அரசை வலியுறுத்துகிறோம். அரசு தேர்வாணையத்தில் யாதவர்களுக்கு முக்கியத்துவமும், முன்னுரிமையும் வழங்க வேண்டும். இனி வரும் தேர்தல்களில் யாதவர்கள் பெரும்பான்மையாக வாழும் பகுதிகளில் அனைத்து அரசியல் கட்சிகளும் யாதவர்கள் போட்டியிட வாய்ப்பு வழங்க வேண்டும். யாதவ மக்களின் வாழ்வாதாரம் ஆடு, மாடு மேய்த்தலாகும். அவர்களின் வாழ்வாதாரம் பாதிக்காத வகையில் அரசு உரிய மேய்ச்சல் நிலங்களை ஒதுக்கி தர வேண்டும் உள்ளிட்ட தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.

Related Stories: