வரும் 24ம் தேதி டெல்லியில் நடைபெறும் ராகுல்காந்தி பாதயாத்திரையில் கமல் பங்கேற்பு

சென்னை: ராகுல்காந்தி நடத்தி வரும் பாதயாத்திரையில் கமல்ஹாசன் பங்கேற்கிறார். காங்கிரஸ் முன்னாள் தலைவர் ராகுல்காந்தி, வரும் 2024ம் ஆண்டு லோக்சபா தேர்தலை இலக்கு வைத்து கன்னியாகுமரி முதல் காஷ்மீர் வரை, ‘பாரத் ஜோடோ யாத்ரா’ என்ற பெயரில், கன்னியாகுமரியில் கடந்த செப்டம்பர் 7ம் தேதி இந்திய ஒற்றுமை பயணம் மேற்கொண்டுள்ளார். தமிழக முதல்வரும், திமுக தலைவருமான மு.க.ஸ்டாலின் பாதயாத்திரையை தொடங்கி வைத்தார். தமிழ்நாடு, கேரளா, கர்நாடகா, ஆந்திரா, தெலங்கானா ஆகிய மாநிலங்களில் பாதயாத்திரை மேற்கொண்ட ராகுல்காந்தி 100வது நாளை கடந்துள்ளார்.

இந்நிலையில், ராகுல்காந்தி மேற்கொள்ளும் பாதயாத்திரையில் மக்கள் நீதி மய்யம் கட்சி தலைவரும், நடிகருமான கமல்ஹாசன் பங்கேற்கிறார். டெல்லியில் வரும் 24ம் தேதி நடைபெறும் பாதயாத்திரையில் கமல்ஹாசன் பங்கேற்க வேண்டும் என்று ராகுல்காந்தி வேண்டுகோள் விடுத்து கடிதம் எழுதியிருந்தார். அவரது வேண்டுகோளை ஏற்றுக்கொண்ட கமல்ஹாசன், தனது மநீம கட்சியைச் சேர்ந்த 1,500க்கும் மேற்பட்ட நிர்வாகிகள் மற்றும் தொண்டர்களுடன் டெல்லிக்கு சென்று பாதயாத்திரையில் கலந்துகொள்கிறார்.

முன்னதாக மநீம கட்சியின் ஆலோசனை கூட்டம் சென்னை அண்ணாநகரில் நேற்று நடந்தது. வரும் 2024ம் ஆண்டு நடைபெறும் நாடாளுமன்ற தேர்தலில் கூட்டணி அமைத்து போட்டியிடுவது பற்றி கூட்டத்தில் ஆலோசிக்கப்பட்டது. மேலும், கிராமப்புறங்களில் கட்சியை வலுப்படுத்த செய்ய வேண்டிய பணிகள் குறித்து நிர்வாகிகளுக்கு கமல்ஹாசன் ஆலோசனை வழங்கினார். கூட்டத்தின் முடிவில் செய்தியாளர்களை சந்தித்த கமல்ஹாசன் கூறுகையில், ‘இந்த ஆலோசனை கூட்டத்தில் பல முக்கிய முடிவுகள் எடுக்கப்பட்டுள்ளன.

கூட்டணி தொடர்பாக நாங்கள் எந்த திசையில் பயணிக்கிறோம் என்பதை, என் பயணத்தை தெரிந்துகொண்டாலே உங்களுக்கு புரியவரும். ஓரிரு வாரங்கள் மாநிலம் முழுவதும் சுற்றுப்பயணம் மேற்கொள்ள திட்டமிட்டுள்ளேன்’ என்றார். ஆலோசனை கூட்டத்தில் மாவட்ட செயலாளர்கள் 117 பேர் பங்கேற்றனர். செயற்குழுவை சேர்ந்த மாநில நிர்வாகிகள் 25 பேரும், நிர்வாக குழுவை சேர்ந்த 5 பேரும் கலந்துகொண்டனர். துணை தலைவர்கள் மவுரியா, தங்கவேலு, செயலாளர்கள் செந்தில் ஆறுமுகம், சிவ இளங்கோ, கவிஞர் சினேகன், முரளி அப்பாஸ், மூகாம்பிகை உள்பட பலர் பங்கேற்றனர்.

Related Stories: