நுங்கம்பாக்கம் பள்ளிக்கல்வி வளாகத்தில் பேராசிரியர் அன்பழகன் நூற்றாண்டு வளைவு: முதல்வர் மு.க.ஸ்டாலின் இன்று திறக்கிறார்

சென்னை: முன்னாள் கல்வி அமைச்சர் பேராசிரியர் அன்பழகன் நூற்றாண்டு நிறைவை போற்றும் வகையில் சென்னை டிபிஐ வளாகத்தில் உருவாக்கப்பட்டுள்ள  ‘பேராசிரியர் அன்பழகன் நூற்றாண்டு வளைவை’, முதல்வர் மு.க.ஸ்டாலின் இன்று காலை திறந்து வைக்கிறார். திருவாரூர் மாவட்டம் காட்டூர் கிராமத்தில், கடந்த 1922ம் ஆண்டு  டிசம்பர் 19ம் தேதி பிறந்தவர் க.அன்பழகன். இவர் கடந்த 1944ம் அண்ணாமலை பல்கலைக் கழகத்தில் படித்து பட்டம் பெற்று சென்னையில் உள்ள பச்சையப்பன் கல்லூரியில் கடந்த 1944ம் ஆண்டு முதல் 1959ம் ஆண்டு வரை துணைப் பேராசிரியராக பணியாற்றியவர். பின்னர் அவர் திமுக சார்பில் 1962ம் ஆ ண்டு சட்ட மேலவை உறுப்பினராக செங்கல்பட்டு தொகுதியில் இருந்து தேர்ந்தெடுக்கப்பட்டார்.

1967ம் ஆண்டு நாடாளுமன்ற உறுப்பினராக இருந்து 1971ம் ஆண்டில் சுகாதாரத்துறை அமைச்சரானார். 1996, 2002, 2006ம் ஆண்டுகளில் நடந்த தமிழக சட்டப் பேரவைத் தேர்தல்களில் திமுக சார்பில் சென்னை துறைமுகம் தொகுதியில் போட்டியிட்டு சட்டப்  பேரவை உறுப்பினராக வெற்றி பெற்றவர். தமிழக கல்வித்துறையில் இரண்டு முறை அமைச்சராக இருந்தவர். 2006-2001ம் ஆண்டு வரை தமிழகத்தின் நிதி அமைச்சராக இருந்தார். இதுவரை அவர் 19 புத்தகங்கள் எழுதியுள்ளார். கடந்த 2020ம் ஆண்டு மறைந்தார். அவரின் நூற்றாண்டை போற்றும் வகையில் தமிழகத்தில் 100 பொதுக்கூட்டங்கள் நடத்தப்பட்டது. அரசின் சார்பில், பேராசிரியர் அன்பழகன் நூற்றாண்டு நிறைவு விழா கொண்டாடப்படுகிறது.

அதனைத் தொடர்ந்து சென்னை நுங்கம்பாக்கம் கல்லூரிச் சாலையில் உள்ள பள்ளிக் கல்வி வளாகத்தில் பேராசிரியர் அன்பழகன் பெயரில் நினைவு வளைவு ஏற்படுத்தப்பட்டுள்ளது. அந்த வளைவை இன்று காலை 10 மணி அளவில் தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் திறந்து வைக்கிறார். மேலும், பள்ளிக் கல்வி வளாகத்துக்கு ‘பேராசிரியர் அன்பழகன் கல்வி வளாகம்’ என்று பெயர் சூட்டுகிறார். இந்த  திறப்பு விழாவில் தமிழக அமைச்சர்கள், நாடாளுமன்ற உறுப்பினர்கள், உள்ளாட்சி அமைப்புகளின் பிரதிநிதிகள், பங்கேற்கின்றனர்.

Related Stories: