சென்னை சுங்கத்துறை அலுவலகத்தில் புதிதாக ‘வைகை வளாகம்’ உருவாகிறது: ஒன்றிய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் அடிக்கல் நாட்டினார்

சென்னை: சென்னை சுங்கத்துறைக்கு கட்டப்படும் வைகை வளாகம் வருங்காலத்தில் கட்டும் அரசு கட்டிடங்களுக்கு முன்னுதாரணமாக இருக்கும் என்று  கட்டிட அடிக்கல் நாட்டு விழாவில் ஒன்றிய அமைச்சர் நிர்மலா சீதாராமன் பேசினார். சென்னை ராஜாஜி சாலையில் உள்ள சென்னை சுங்கத்துறை அலுவலகத்தில்  நடைபெற்ற நிகழ்ச்சியில் ஒன்றிய நிதி அமைச்சர்  நிர்மலா சீதாராமன் ‘வைகை’ எனும் புதிய அலுவலக வளாகத்துக்கு  அடிக்கல் நாட்டி, பூமி பூஜையில் பங்கேற்றார். இந்த நிகழ்ச்சியில் மத்திய மறைமுக வரிகள் மற்றும் சுங்கத்துறை வாரியத்தின் தலைவர்  விவேக் ஜோரி, ஜிஎஸ்டி உறுப்பினர் ரமா மேத்யூ, சென்னை சுங்க மண்டல தலைமை ஆணையர் எம்.வி.எஸ்.சவுத்ரி மற்றும் மூத்த சுங்கத்துறை அதிகாரிகள் கலந்து கொண்டனர்.

வைகை வளாகத்தில் ஏற்றுமதி, இறக்குமதியை இணைக்கும் அரசு அமைப்புகளின் அலுவலகங்கள் அமைய உள்ளது. ஒரு லட்சத்து எழுபதாயிரம் சதுர அடியில் 2 அடித்தளங்கள், 9  தளங்கள் கூடிய கட்டிடமாக ரூ. 91.64 கோடியில் இந்த வளாகம்  2024ம் ஆண்டுக்குள் கட்டி முடிக்க திட்டமிடப்பட்டுள்ளது. நிகழ்ச்சியில் பேசிய ஒன்றிய நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமன் கூறியதாவது: இந்தியா தொழிற்துறையினருக்கு வசதிகளை மேம்படுத்துவதற்கு தன்னை அர்ப்பணித்துக் கொண்டதன் அடையாளமாக இந்த வளாகம்  உருவாக்கப்படுகிறது.  

தமிழ்நாட்டில் இதுபோன்ற முன்யோசனையுடன் ஒரு அலுவலக வளாகம்  கட்டப்படுவது மகிழ்ச்சி அளிக்கிறது. அலுவலகத்தில் பணியாற்றும் பெண்களுக்கு ஏற்ப வளாகம் கட்டப்படுகிறது. சென்னை சுங்க இல்லத்தை,  தூய்மை இந்தியா திட்டத்தை முன்வைத்து அனைத்து இடங்களையும் சுகாதாரமாக பராமரித்து வருகின்றனர்.புதிதாக கட்டப்படவுள்ள வைகை வளாகம் வருங்காலத்தில் கட்டப்பட உள்ள அரசாங்க கட்டடங்களுக்கு முன்னுதாரணமாக திகழும். இவ்வாறு அவர் கூறினார்.

Related Stories: