சமயபுரம் கோயிலில் தரம் உயர்ந்த குங்குமம் தயாரிப்பு; மத்திய மண்டலத்தில் அனைத்து கோயில்களுக்கும் வழங்க நடவடிக்கை

திருச்சி: மயபுரம் கோயிலில் தயாரிக்கப்படும் தரம் உயர்ந்த குங்குமம் மத்திய மண்டலத்தில் அனைத்து கோயில்களுக்கும் வழங்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. சக்தி தலங்களில் சிறப்புமிக்க சமயபுரம் மாரியம்மன் கோயில் திருச்சி சத்திரம் பஸ்நிலையத்தில் இருந்து 10 கிமீ தொலைவிலும், மத்திய பஸ் நிலையத்தில் இருந்து 15 கிமீ தொலைவிலும் அமைந்துள்ளது. பிரசித்தி பெற்ற இக்கோயிலுக்கு தினமும் ஆயிரக்கணக்கான பக்தர்கள் தமிழகம் மட்டுமில்லாது, மற்ற மாநிலங்கள் மற்றும் வெளிநாடுகளிலும் இருந்து வந்து செல்கின்றனர்.

இந்த கோயிலில் ஒவ்வொரு மாத அமாவாசை, பவுர்ணமி அன்று இரவு பக்தர்கள் கோயிலில தங்கியிருந்து சுவாமி தரிசனம் செய்து வருகின்றனர். மேலும், சித்திரை மாத விழாவான பூ திருவிழா, சித்திரை தேரோட்டம், தை மற்றும் ஆடி அமாவாசை ஆகிய நாட்களில் பல்லாயிரக்கணக்கான பக்தர்கள் வந்து தரிசனம் செய்து செல்கின்றனர். சமீபத்தில் இந்த கோயிலுக்கு ராஜகோபுரம் புதிதாக நிர்மாணம் செய்யப்பட்டு கும்பாபிஷேகம் செய்யப்பட்டது. மேலும், பக்தர்களின் வசதிக்காக மொட்டை அடிக்கும் நிலையம், பக்தர்கள் தங்கும் வசதிகள் உள்ளிட்ட பல்வேறு வசதிகள் செய்யப்பட்டுள்ளது.

இவ்வளவு சிறப்புமிக்க சமயபுரம் கோயிலில் பக்தர்களுக்கு வழங்கப்படும் குங்குமம் பிரசாதம் வெகு சிறப்பு வாய்ந்ததாகும். ஏனெனில் குங்கும பிரசாதம் இந்த கோயில் பணியாளர்கள் மூலம் தயாரிக்கப்பட்டு வழங்கப்படுவதுடன் பிற கோயில்களுக்கும் வழங்கப்பட்டு வருகிறது. தமிழகத்தில் உள்ள கோயில்களில் குங்குமம் பிரசாதம் உற்பத்தி செய்து வழங்கும் பணியில் 4 கோயில்கள் ஈடுபட்டு வருகிறது. அதில் மத்திய மண்டலத்தில் திருச்சி சமயபுரம், தென்மண்டலத்தில் மதுரை மீனாட்சி அம்மன் கோயில், வடக்கு மண்டலத்தில் சென்னை திருவேற்காடு கருமாரியம்மன் கோயில், மேற்கு மண்டலத்தில் பன்னாரி அம்மன் கோயில்களில் குங்குமம் பிரசாதம் உற்பத்தி செய்யப்பட்டு வருகிறது. இதில் திருச்சி சமயபுரம் கோயிலில் தயாரிக்கப்படும் குங்குமம் எவ்வித செயற்கை பொருட்கள் இன்றி இயற்கையான பொருட்களை கொண்டு தயாரிக்கப்பட்டு வருகிறது. இது எவ்வித தோல் பிரச்னை உள்ளிட்ட எவ்வித பக்கவிளைவுகளையும் ஏற்படுத்துவதில்லை.

இதுகுறித்து குங்குமம் தயாரிக்கும் பணியில் ஈடுபட்டு வரும் மணிமாறன் கூறுகையில், 1982ம் ஆண்டு நவம்பர் 26ம் தேதி சமயபுரத்தில் குங்குமம் தயாரிக்க துவங்கப்பட்டது. குங்குமம் தயாரிக்க பயன்படும் பொருட்கள் அனைத்தும் கூட்டுறைவு சொசைட்டி மூலம் வாங்கப்படுகிறது. இதில் விரளி மஞ்சள் ஈரோட்டில் வாங்கப்படுகிறது. அதுபோல் மலைகளில் விளையும் பொருட்களான படிகாரம், வெங்காரம் மற்றும் கஸ்தூரி மஞ்சள், அக்மார்க் நல்லெண்ணெய் ஆகியவற்றை பயன்படுத்தி குங்குமம் தயாரிக்கப்படுகிறது. எலுமிச்சை சாறு பிழிந்து அதில் விரளி மஞ்சள், படிகாரம், வெங்காரம் ஆகியவற்றை கலந்து கிளறி 7 நாட்கள் வைத்து பின்னர் 6 நாட்கள் ஈரப்பதம் போக நன்றாக வெயிலில் காய வைத்து பின்னர், எந்திரத்தில் போட்டு மஞ்சளை உடைத்து, மற்றொரு எந்திரத்தில் நயமாக அரைக்கப்படும். பின்னர் பிளண்டர் என்ற எந்திரத்தில் நல்லெண்ணய் ஊற்றி அதில் அரைத்த மஞ்சளை போட்டு பக்குவமாக கிளறப்படும். அதனை தொடர்ந்து பாக்கெட்டில் குங்குமத்தை போட்டு பேக்கிங் செய்யும் எந்திரத்தில் போட்டு தேவையான அளவிற்கு பாக்கெட் போடப்படும்.

விரளி மஞ்சள், படிகாரம், வெங்காரம், கஸ்தூரி மஞ்சள் மற்றும் நல்லெண்ணய் ஆகியவற்றை சரியான அளவில் சேர்த்து காயவைத்து அரைக்க வேண்டும். இதற்கு 1000 எலுமிச்சை பழத்தை பிழிந்தால் சுமார் 7 முதல் 7.50 லிட்டர் சாறு கிடைக்கும். இதனோடு 100 கிலோ விரளி மஞ்சள், 6 கிலோ படிகாரம், 6 கிலோ வெங்காரம், 6 கிலோ கஸ்தூரி மஞ்சளை சேர்த்து கிளறி ஊற வைக்க வேண்டும். ஊறிய பின்னர் வெயிலில் காய வைத்து எந்திரத்தில் போட்டு உடைத்து அரைத்தால் மொத்தம் 106 கிலோ மஞ்சள் தூள் கிடைக்கும். அதனை தொடர்ந்து பிளண்டர் எந்திரத்தில் 10 லிட்டர் நல்லெண்ணய் ஊற்றி 106 கிலோ அரைத்து மஞ்சளை சேர்த்தால் தரமான மருத்துவ குணம் கொண்ட குங்குமம் கிடைக்கும். இதனை தேவையான அளவான 100கிராம், 40 கிராம் மற்றும் 8 கிராம் பாக்கெட்டில் அதற்குரிய எந்திரத்தில் போட்டு அடைக்கப்படும். இதற்காக முக்கிய பொருளான விரளி மஞ்சள் சுமார் 3 டன் உள்ளிட்ட பொருட்களை வாங்கி இருப்பு வைக்கப்படும். இவற்றை அரைத்து 5 மாதம் வரை தயார் நிலையில் வைத்திருப்போம். அளவு குறைய,குறைய பொருட்கள் வாங்கி அரைக்க நடவடிக்கை மேற்கொள்வோம் என்றார்.

சமயபுரம் கோயில் இணை ஆணையர் கல்யாணி கூறுகையில், திருச்சி சமயபுரம் கோயிலுக்கு சொந்தமாக வீட்டு வசதி வாரிய குடியிருப்பு பகுதியில் குங்குமம் தயாரிக்கும் சிறிய தொழிற்கூடம் இயங்கி வருகிறது. இங்கு தயாரிக்கப்படும் குங்குமம் சமயபுரம் கோயிலுக்கு பயன்படுத்துவது மட்டுமில்லாது, திருவாரூர் மாவட்ட ஆலங்குடி குருபகவான் கோயில், உறையூர் வெக்காளியம்மன் கோயில், சென்னை திருவொற்றியூர் வடிவுடையம்மன் கோயிலுக்கும் அனுப்பப்பட்டு வருகிறது. சமயபுரம் கோயிலுக்கு மட்டும் பக்தர்களுக்கு வழங்க ஒரு மாதத்திற்கு 750 கிலோ ஆகிறது. அதுபோல் குருபகவான் கோயிலுக்கு மாதம் 25 கிலோ, சென்னை திருவொற்றியூர் வடிவுடையம்மன் கோயிலுக்கு மாதம் 200 கிலோ, உறையூர் வெக்காளியம்மன் கோயிலுக்கு மாதம் 50 கிலோ வழங்கப்படுகிறது. பக்தர்களுக்கு இலவச பிரசாதமாக வழங்கப்படுவது போல், கோயில் ஸ்டால்களில் 100 கிராம் ரூ.35, 40 கிராம் ரூ.15, 8 கிராம் ரூ.3 என்ற அளவிலும் பாக்கெட்டில் அடைத்து விற்பனை செய்யப்பட்டு வருகிறது.

இதற்கிடையில் இந்து சமய அறநிலையத்துறை சார்பில் சமீபத்தில் அந்தந்த மண்டலங்களில் உற்பத்தி செய்யப்படும் பிரசாத பொருட்களை அதனை சுற்றி உள்ள கோயில்களுக்கு வாங்கி வழங்க வேண்டும் என உத்தரவிடப்பட்டுள்ளது. அதனடிப்படையில் திருச்சி சமயபுரத்தில் தயாரிக்கப்படும் மருத்துவ குணம் கொண்ட குங்குமம் திருச்சி, தஞ்சாவூர், திருவாரூர், நாகப்பட்டிணம், புதுக்கோட்டை, பெரம்பலூர், அரியலூர், கரூரில் உள்ள இந்துசமய அறநிலையத்துறை கட்டுப்பாட்டில் உள்ள கோயில்களுக்கு குங்குமம் வழங்க நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது. இதற்காக ரூ.38 லட்சத்தில் நவீன இயந்திரங்கள் வாங்குவதற்கான கருத்துரு அனுப்பி வைக்கப்பட்டுள்ளது. இதில், புதிய எந்திரத்தை நன்கொடையாளர் ஒருவர் வழங்க உள்ளார்.

இவ்வாறு அவர் கூறினார்.

Related Stories: