புதுச்சேரி பாஜ அலுவலகத்தில் மகளிரணியினர் குடுமிப்பிடி சண்டை

புதுச்சேரி: பிரதமர் மோடியை பற்றி தவறான கருத்துக்களை தெரிவித்த பாகிஸ்தான் வெளியுறவுத்துறை அமைச்சர் பிலாவல் புட்டோவை கண்டித்து புதுச்சேரி மாநில பாஜ சார்பில் நேற்று ஆர்ப்பாட்டம் நடந்தது. இந்திராகாந்தி சிலை அருகில் நடந்த போராட்டத்துக்கு மாநில தலைவர் சாமிநாதன் தலைமை தாங்கினார். அமைச்சர் சாய். சரவணன்குமார், எம்எல்ஏக்கள் வி.பி.ராமலிங்கம், அசோக்பாபு ஆகியோர் முன்னிலை வகித்தார். இதில் பாஜ மாநில, மாவட்ட, தொகுதி, மகளிர் நிர்வாகிகள் உள்பட 50க்கும் மேற்பட்டோர் கலந்து கொண்டனர்.

அப்போது பாகிஸ்தான் தேசியக்கொடி, அமைச்சர் படத்தை தீயிட்டு எரிக்க முயன்றதால் பரபரப்பு ஏற்பட்டது. அங்கு பாதுகாப்பு  பணியிலிருந்த போலீசார் அவர்களை தடுத்து அப்புறப்படுத்தினர். இதனிடையே  ஆர்ப்பாட்டத்தை முடித்துவிட்டு மாநில தலைமை அலுவலகம் வந்த, மகளிரணியினர் திடீரென கைகலப்பில் ஈடுபட்டனர். மாநில தலைவர் சாமிநாதன் அலுவலகத்தில் இருக்கும்போதே மகளிர் அணியினர் இருகோஷ்டியாக பிரிந்து மோதிக் கொண்டதால்  பரபரப்பு ஏற்பட்டது. போராட்டத்தின்போது, மகளிரணி சார்பில் யார் முன்னிலையில் நிற்பது என்பதில் ஏற்பட்ட பிரச்னை காரணமாக மோதல் ஏற்பட்டதாக தெரிகிறது. இதையடுத்து கட்சித் தலைமை, அவர்களை சமாதானப்படுத்தி அங்கிருந்து அனுப்பி வைத்தது.

Related Stories: