தமிழக எல்லையில் கொட்டப்படும் கேரள கழிவுகள் 17 மாவட்டங்களின் கலெக்டர்கள் அறிக்கை தாக்கல் செய்ய பசுமை தீர்ப்பாயம் உத்தரவு

சென்னை: தமிழக-கேரள எல்லை பகுதியில் உள்ள தென்காசி, கன்னியாகுமரி, திண்டுக்கல், நீலகிரி உள்ளிட்ட மாவட்டங்களில் கேரளாவில் இருந்து வாகனங்களில் கொண்டுவரப்படும் மருத்துவக் கழிவுகள் கொட்டப்படுகின்றன. இதேபோல, கோவை மாவட்டம் பொள்ளாச்சியை அடுத்த ஆனைமலை பகுதியில் கடந்த ஆண்டு கேரளாவில் இருந்து கொண்டுவரப்பட்ட மருத்துவக் கழிவுகள், பிளாஸ்டிக் கழிவுகளை கொட்டிய 3 லாரிகளை விவசாயிகள் சிறைபிடித்தனர்.

இதுதொடர்பான புகாரை சென்னையில் உள்ள தென் மண்டல தேசிய பசுமை தீர்ப்பாயம் தாமாக முன்வந்து விசாரணைக்கு எடுத்துக்கொண்டது.

இந்த வழக்கை விசாரித்த தீர்ப்பாய நீதிபதி புஷ்பா சத்தியநாராயணா, உறுப்பினர் சத்திய கோபால் பிறப்பித்த உத்தரவில் கூறியிருப்பதாவது: பொள்ளாச்சி, நீலகிரி, ஆனைமலை பகுதிகளில் மருத்துவக்கழிவுகள் கொட்டப்படுவதாக செய்திகள் வருகின்றன. தீவிர நடவடிக்கை எடுக்காதவரை, வெளி மாநிலங்களில் இருந்து, தமிழக பகுதிகளில் குப்பை கொட்டப்படுவதை தடுக்க முடியாது. மேலும் தென்காசி, நெல்லை, கன்னியாகுமரி, கோவை, திருப்பூர், நீலகிரி, திண்டுக்கல், தேனி, விருதுநகர் மாவட்ட ஆட்சியர்களும், கேரள மாநிலத்தின் வயநாடு, திருச்சூர், பாலக்காடு, இடுக்கி, மலப்புரம், பத்தினம்திட்டா, கொல்லம், திருவனந்தபுரம் மாவட்டங்களின் ஆட்சியர்களும் விரிவான அறிக்கை தாக்கல் செய்ய வேண்டும். இவ்வாறு உத்தரவில் கூறப்பட்டுள்ளது. இந்த வழக்கு விசாரணையை வரும் ஜனவரி 20ம் தேதிக்கு ஒத்திவைத்தனர்.

Related Stories: