மாண்டஸ் புயலால் அணைக்கட்டு பகுதியில் 70.72 ஏக்கர் பயிர் சேதம்: நிவாரணம் வழங்க விவசாயிகள் கோரிக்கை

அணைக்கட்டு: வேலூர் மாவட்டம் அணைக்கட்டு வட்டாரத்தில் அணைக்கட்டு, ஒடுகத்தூர், பள்ளிகொண்டா உள்வட்டங்கள் உள்ளன. இங்குள்ள விவசாயிகள் நெற்பயிர்கள், வாழை மரங்கள், கரும்பு, துவரை, தக்களி, கத்திரி உள்ளிட்ட பல்வேறு பயிர்களை பயிரிட்டு வளர்த்து வருகின்றனர்.

கடந்த 9ம் தேதி ஏற்பட்ட மாண்டஸ் புயல் மற்றும் கனமழை காரணமாக பல இடங்களில் பல ஏக்கரில் பயிரிட்டிருந்த நெல், வாழை மரங்கள் சாய்ந்தும், நீரில் முழ்கியும் சேதமானது. தகவலறிந்த வருவாய் ஆய்வாளர்கள், விஏஓக்கள், வட்டார வேளாண்மை, தோட்டகலை துறையினர் கடந்த ஒருவாரமாக விவசாய நிலங்களுக்கு நேரடியாக சென்று சேதமடைந்த பயிர்கள், செடிகளை கணக்கிட்டு ஆய்வு செய்து வருகின்றனர்.  

இதுகுறித்து வேளாண் மற்றும் தோட்டக்கலை துறையினர் கூறியதாவது: அணைக்கட்டு வட்டாரத்தில்  மாண்டஸ் புயல் மழை காரணமாக  8.82 ஏக்கர் நெல், 1.20 ஏக்கர் கரும்பு, 500 சென்ட் துவரை, மக்காசோளம் 4.20 ஏக்கர், உளுந்து 1 ஏக்கர், கொள்ளு 4 ஏக்கர், கடலை செடிகள் 2 ஏக்கர் என 21.72 ஏக்கர் அளவிலும், தோட்டகலை துறை பயிர்களான வாழை மரங்கள், தக்காளி, கத்திரி, வெண்டை, மிளகா உள்ளிட்டவைகள் 49 ஏக்கர் அளவிலும் சேதமடைந்திருப்பது  கணக்கெடுக்கப்பட்டுள்ளது.

இந்த சேதத்தால் பாதிக்கபட்ட விவசாயிகளுக்கு உரிய இழப்பீடு நிவாரண தொகை கிடைப்பதற்கும் நடவடிக்கை எடுக்கப்பட்டு பரிந்துரைகள் செய்யபட்டு வருகிறது. இதில் தோட்டகலை துறை மட்டும் இன்னும் கணக்கெடுப்பு பணிகள் தொடர்வதால் முழுமையாக கணக்கெடுக்கப்பட்டு சேதத்தால் பாதிக்கபட்ட அனைத்து விவசாயிகளுக்கு உரிய நிவாரணம் கிடைக்க நடவடிக்கை எடுக்கப்படும் என்றனர். மேலும் பயிர் சேதங்களுக்கான நிவாரண தொகையை விரைந்து பெற்று தர ஏற்பாடு செய்ய வேண்டும் என்று விவசாயிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

Related Stories: