கள்ளச்சாராய மரண விவகாரம்; உங்களை முதல்வர் ஆக்கியதற்காக வருந்துகிறேன்!: நிதிஷ் குமாருக்கு எதிராக பிரசாந்த் கிஷோர் கருத்து

பாட்னா: கள்ளச்சாராய விவகாரத்திற்கு மத்தியில், ‘உங்களை முதல்வர் ஆக்கியதற்காக வருந்துகிறேன்’ என்று நிதிஷ் குமார் குறித்து பிரசாந்த் கிஷோர் கருத்து தெரிவித்து உள்ளார். பீகாரில் கள்ளச்சாராயம் குடித்து இறந்தவர்களின் எண்ணிக்கை 80-ஐ கடந்த நிலையில், அம்மாநில அரசுக்கு ெபரும் நெருக்கடி ஏற்பட்டுள்ளது.

இவ்விவகாரம் குறித்து தேர்தல் வியூக நிபுணர் பிரசாந்த் கிஷோர் கூறுகையில், ‘பிரதமராக வாஜ்பாய் இருந்த போது ஒன்றிய அரசின் ரயில்வே அமைச்சராக நிதிஷ்  குமார் இருந்த போது ரயில் விபத்து ஏற்பட்டது. அந்த விபத்துக்கு  பொறுப்பேற்று நிதிஷ் குமார் தனது பதவியை ராஜினாமா செய்தார். அன்று இருந்த நிதிஷ் குமாருக்கும், இப்போது இருக்கும் நிதிஷ் குமாருக்கும் நிறைய வித்தியாசம் உள்ளது.

நிதிஷ் குமாரை முதல்வர் ஆக்குவதற்காக அவருக்கு நான் உதவினேன். ஆனால் தற்போது அதற்காக வருத்தப்படுகிறேன். கள்ளச்சாராய மரணங்களை பார்த்து சிரிக்கிறார்; கள்ளச்சாராயத்தை யார் குடித்தாலும் சாவார்கள் என்று கூறுகிறார். இவரது பேச்சு ஆணவத்தின் உச்சமாக உள்ளது. அவருக்கான அழிவு தொடங்கிவிட்டது. உணர்ச்சியற்ற முறையில் பேசுகிறார். அதேநேரம் சட்டசபையில் பேசும்போது, பீகாரில் மதுவிலக்கு அமலில் உள்ளது என்று கூறினார். அப்படியிருந்தும், கள்ளச்சாராயம் குடித்து ஒருவர் இறக்கிறார் என்றால், யார் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும்’ என்று கேள்வி எழுப்பி உள்ளார்.

Related Stories: