நெல்லை: இந்தியாவில் நடைபெறும் ஜி-20 மாநாட்டில் பயன்படுத்துவதற்காக 2 லட்சம் மண் ஹாட்பாக்ஸ் நெல்லையிலிருந்து தயாரித்து அனுப்பப்படவுள்ளது. தமிழர்களின் முக்கிய பண்டிகையான தைப்பொங்கலுக்கு இன்னும் 27 நாட்களே உள்ள நிலையில் இதற்கான பொங்கல் மண் பானை மற்றும் அடுப்பு உள்ளிட்டவைகள் தயாரிக்கும் பணியில் தமிழகம் முழுவதும் மண்பாண்ட தொழிலாளர்கள் விறுவிறுப்பாக ஈடுபட்டு வருகின்றனர். நெல்லை குறிச்சியில் தயாராகும் பானைகள் தமிழகம் மட்டுமின்றி கடல் கடந்து மலேசியாவுக்கும் செல்கிறது. கடந்த 2 ஆண்டுகளாக கொரோனா காரணமாக மலேசியாவுக்கு பொங்கல் பானை தயாரித்து அனுப்புவது தடைபட்ட நிலையில் தற்போது அங்கிருந்து ஆர்டர் பெறப்பட்டு நெல்லையில் பொங்கல் பானைகள் தயாராகின்றன.
இதுகுறித்து மண்பாண்ட தொழிலாளர் முருகன் கூறுகையில், மலேசியாவில் பொங்கல் பண்டிகைக்கு சுமார் 10 நாட்களுக்கு முன்னரே ‘பொங்கல் சந்தை’ என்ற பெயரில் வியாபாரிகள் கூடுவர். இதற்காக நெல்லையில் ஆர்டர் பெற்று பொங்கல் பானை தயாரிக்கிறோம். மலேசியாவுக்கு 3 லிட்டர், இரண்டரை லிட்டர் கொள்ளவு உடைய சுமார் 2 ஆயிரம் பானைகள் தயாரித்துள்ளோம். பணி முடித்து பானைகள் கப்பலில் மலேசியாவுக்கு அனுப்பி வைக்கப்படும். இந்த பானைகள் ரூ.150 விலையில் வழங்குகிறோம். இந்தியாவில் ஜி20 நாடுகளின் பிரதிநிதிகள் மாநாட்டின் போது 2 லட்சம் மண் ஹாட்பாக்ஸ் தயாரித்து அனுப்ப கேட்டுள்ளனர். இதற்காக ஒன்றிய அரசும், தமிழக அரசும் உதவுகிறது என்றார்.
* மண் எடுக்க அரசு அனுமதிமண்பாண்ட உற்பத்தியாளர்கள் கூறுகையில், தமிழகத்தில் நெல்லை உள்ளிட்ட சில மாவட்டங்களில் தரமான மண் கிடைப்பதும் ஒரு காரணமாகும். ஒரு சில குளங்களில் மண் எடுப்பதற்கு அரசு அனுமதிக்க வேண்டும் என்றனர்.