காளைகள் களமாடுவதை பார்க்க ரெடியா?.. அலங்காநல்லூர், பாலமேடுவில் ஜல்லிக்கட்டு பணிகள் துவக்கம்: கமிட்டி நிர்வாகிகள் தீவிரம்

அலங்காநல்லூர்: பொங்கல் பண்டிகையையொட்டி ஜன. 15ம் தேதி மதுரை அவனியாபுரம், மறுநாள் (ஜன. 16) பாலமேடு, ஜன. 17ம் தேதி உலகப்புகழ் பெற்ற அலங்காநல்லூர் ஜல்லிக்கட்டு நடைபெறும். இன்னும் 4 வாரங்களே உள்ள நிலையில், பாலமேடு ஜல்லிக்கட்டு விழா கமிட்டி நிர்வாகிகள், ஜல்லிக்கட்டு போட்டிகளை சிறப்பாக நடத்துவதற்கான ஏற்பாடுகளை தீவிரமாக செய்து வருகின்றனர்.

முதற்கட்டமாக ஜல்லிக்கட்டு மைதானங்களை தூய்மைப்படுத்தும் பணியும், அங்குள்ள வாடிவாசல் மற்றும் பார்வையாளர் மாடங்களை தூய்மைப்படுத்துதல் மற்றும் வாடிவாசலில் வர்ணம் தீட்டும் பணிகள் விறுவிறுப்பாக நடைபெற உள்ளது. இதன்படி முதற்கட்ட பணிகளை தொடங்க அனுமதி வழங்கக்கூடிய மாவட்ட நிர்வாகம் உள்ளிட்ட வருவாய் துறை, கால்நடைத்துறை ஆகிய அதிகாரிகளிடம் முறையான அனுமதி பெற்ற பின்பு, ஜல்லிக்கட்டு பணிகள் மேலும் விறுவிறுப்படையும் என தெரிகிறது.

இதற்கு முன்னோட்டமாக தற்போது ஜல்லிக்கட்டு விழா கமிட்டி நிர்வாகிகள், அந்தந்த கிராம அளவில் கூட்டம் நடத்தி ஜல்லிக்கட்டு பணிகளை துவங்குவதற்கு ஆயத்தமாகி வருகின்றனர். நோட்டீஸ்களும் அடிக்கப்பட்டுள்ளன. இதுதொடர்பாக அமைச்சர் பி.மூர்த்தி, சோழவந்தான் எம்எல்ஏ வெங்கடேசன் ஆகியோரிடமும், நிர்வாகிகள் பேசி வருகின்றனர். மேலும், ஜல்லிக்கட்டு தொடங்குவதற்கு முன்பாக காளைகள், வீரர்கள் பதிவு நடவடிக்கைகளை முறைப்படுத்துவது தொடர்பாகவும் ஆலோசனை நடைபெற்றது.

Related Stories: