மெரினாவில் பேனா நினைவுச் சின்னம் அமைப்பதற்கு எதிரான தடை கோரிய வழக்கில் அரசு பதில்தர தென்மண்டல பசுமை தீர்ப்பாயம் உத்தரவு

சென்னை: சென்னை மெரினா கடற்கரையில் மறைந்த முன்னாள் முதல்வர் கருணாநிதியின் நினைவாக பேனா நினைவுச்சின்னம் அமைக்க தடை கோரி வழக்கு தொடரப்பட்டது. ஒன்றிய , மாநில அரசுகள் மற்றும் சென்னை மாநகராட்சி பதிலளிக்க தென்மண்டல பசுமை தீர்ப்பாயம் உத்தரவிட்டுள்ளது. திருச்செந்தூரைச் சேர்ந்த ராம்குமார் ஆதித்தன் இந்த வழக்கை தாக்கல் செய்துள்ளார்.

நேப்பியம் பாலம் முதல் கோவளம் வரையிலான கடலோர பகுதிகளாக அறிவித்து 2016-ம் ஆண்டு தமிழக அரசு அரசாணை பிறப்பித்திருக்கிறது. ஆமைகள் முட்டையிடும் இனப்பெருக்கம் செய்யக்கூடிய பகுதிகளாக வகைப்படுத்தப்பட்டுள்ளது. கட்டுமானங்கள் மேற்கொள்வதால் ஆமைகளின் இனப்பெருக்கம் பாதிக்கப்படுவதுடன் கடல் வளமும் பாதிக்கப்படும் என மனுவில் கூறியிருந்தார்.

மேலும் கடலோர ஒழுங்குமுறை விதிகளின்படி நிபுணர் குழு அமைத்து விதிகளுக்கு மாறாக கட்டப்பட்டுள்ள அனைத்து கட்டுமானங்களையும் அகற்ற உத்தரவிட வேண்டும் என்றும் மெரினா கடற்கரையில் இனி எவருடைய உடலையும் அடக்கம் செய்வதற்கு அனுமதிக்கக்கூடாது எனவும் அந்த மனுவில் கோரிக்கை விடுத்திருந்தார். அதோடு மெரினா கடற்கரையில் இருக்ககூடிய ஆக்கிரமிப்புகளை முழுமையாக அகற்றி அவற்றை பழைய நிலைக்கு மீட்டெடுக்க வேண்டும் என்று கூறியிருந்தார்.

இந்த வழக்கை விசாரித்த தென்மண்டல தேசிய பசுமை தீர்ப்பாயம் நீதித்துறை உறுப்பினர் நீதிபதி புஷ்பா சத்தியநாதன் மற்றும் நிபுணர் குழு உறுப்பினர் சத்தியகுமார் அடங்கிய அமர்வு இந்த மனு தொடர்பாக 8 வாரங்களில் பதில் அளிக்க வேண்டும் என்று ஒன்றிய மாநில அரசுகளுக்கும் மற்றும் சென்னை மாநகராட்சிக்கும் உத்தரவிட்டு இந்த வழக்கின் விசாரணையை பிப்ரவரி மாதத்திற்கு தள்ளி வைக்கப்பட்டுள்ளது.

Related Stories: