வெளிநாட்டு சதியா இருக்குமோ? சீனாவில் வேகமாக பரவும் கொரோனா: மருத்துவமனைகள் முன்பு அலை மோதும் மக்கள் கூட்டம்

பெய்ஜிங்: சீனாவில் கொரோனா தொற்று வேகமாக பரவி வருகிறது. இதனால் சிகிச்சைக்காக மக்கள் கூட்டம் மருத்துவமனைகள் முன்பு அலைமோதுகிறது. சீனாவில் கொரோனா பரவல் அதிகரித்து வருகிறது. அங்கு கட்டுப்பாடுகளை எதிர்த்து மக்கள் போராட்டம் நடத்தியதால் அனைத்து கட்டுப்பாடுகளும் தற்போது தளர்த்தப்பட்டுள்ளன. இருப்பினும் தினசரி பாதிப்பு புதிய உச்சத்தை தொட்டு வருகிறது. சீனாவை சேர்ந்த 93 சதவீதத்துக்கும் அதிகமானவர்கள் தடுப்பூசி செலுத்தியும் நோயை கட்டுப்படுத்த முடியவில்லை.  ஒரு நாளைக்கு 10 லட்சத்திற்கும் அதிகமானோருக்கு தடுப்பூசி செலுத்தப்பட்டு  வருகிறது. பீஜிங், சீனாவில் கடந்த சில நாட்களாக கொரோனா மீண்டும் வேகமாக  பரவி வருகிறது. பெய்ஜிங் உள்ளிட்ட முக்கிய நகரங்களில் மக்கள் மருத்துவமனைகள் முன்பு சிகிச்சைக்காக நீண்ட வரிசையில் காத்திருக்கிறார்கள்.

நடைபாதைகளில் கூட மணிக்கணக்கில் காத்திருக்க வேண்டிய நிலை ஏற்பட்டுள்ளது. பலர் அதிகபட்ச காய்ச்சலால் அவதிப்படுகிறார்கள். இந்தநிலையில் கடந்த மாதம் கொரோனா கட்டுப்பாடுகளை எதிர்த்து நடந்த போராட்டத்தில் வெளிநாட்டு சதி இருக்கலாம் என்று சீனா சந்தேகம் அடைந்துள்ளது. அப்போது நடந்த போராட்டத்தில் அதிபர் ஜி ஜின்பிங்கிற்கு எதிராகவும், ஆளும் கம்யூனிஸ்ட் கட்சிக்கு எதிராகவும் கோஷம் எழுப்பப்பட்டது. பெய்ஜிங், ஷாங்காய், குவாங்டாங் உள்ளிட்ட நகரங்கிலும் இந்த போராட்டம் நடந்தது. ஆனால் கொரோனா பாதிப்பு அதிகம் இருக்கும் போது இப்படி மக்கள் போராட்டத்தை வெளிநாட்டு சக்திகள் தூண்டி விட்டு இருக்கலாம் என்று சந்தேகம் அடைந்துள்ள சீனா அதுபற்றி விசாரித்து வருகிறது.

Related Stories: