வண்ண விளக்குகளால் மின்னொளியில் ஜொலிக்கும் லண்டன் நகரம்: கிறிஸ்துமஸ் பண்டிகையை முன்னிட்டு களைகட்டும் உலக நாடுகள்

லண்டன்: டிசம்பர் 25-ம் தேதி கிறிஸ்துமஸ் பண்டிகை கொண்டாட பட உள்ள நிலையில் பல்வேறு நாடுகளில் அதற்கான முன்னெற்பாடுகள் மும்முரமாக நடைபெற்று வருகின்றன. கட்டிட அலங்காரங்கள், ஆடல்பாடல் கச்சேரிகள் மற்றும் பண்டிகைக்கு தேவையான பொருட்களை வாங்குவதில் மக்கள் ஆர்வம் காட்டி வருகின்றனர். வண்ண விளக்குகள், மலர் தோரணங்கள், சிகரம் போன்று உயர்ந்து நிற்கும் கிறிஸ்துமஸ் மரங்கள் ஜொலிக்கும் நகர வீதிகள் என இங்கிலாந்து தலைநகர் லண்டன் கிறிஸ்துமஸ் பண்டிகையை முன்னிட்டு விழாக்கோலம் கொண்டுள்ளது.

வீதிக்கு நடுவே சிறகுகளை விரித்தபடி தேவதை பறப்பது போல விளக்குகளால் அலங்கரிக்கப்பட்டிருப்பது நகரவாசிகளை ஆச்சரியத்தில் ஆழ்த்தியது. லண்டனில் வழக்கத்திற்குமாறாக இந்த ஆண்டு ஒரே நேரத்தில் 20 முக்கிய கடை வீதிகள் ஜொலிக்க தொடங்கியுள்ளன. அந்தரத்தில் நட்சத்திரங்கள், மின்னும் கட்டிட சுவர்கள் என ஒவ்வொரு பகுதியும் புதுமையான வேலைபாடுகளுடன் அலங்கரிக்கப்பட்டுள்ளது.

நகரின் மையத்தில் வைக்கப்பட்டுள்ள கிறிஸ்துமஸ் மரத்தை பொதுமக்கள் வெகுநேரம் நின்று ரசித்து செல்கின்றனர். கிறிஸ்துமஸ் கொண்டாட்டங்களுக்காக பரிசுப்பொருட்களை வாங்கி குவிக்க கடைகளில் மக்கள் கூட்டம் அலைமோதுகிறது. மற்றோரு பக்கம் வாடிக்கையாளர்களை கவர வியாபாரிகள் கடைகளை அலங்கரித்துள்ளனர்.

ஆஸ்திரேலியாவின் சிட்னி நகரம் கிறிஸ்துமஸை முன்னிட்டு விழாக்கோலத்தில் காட்சியளிக்கிறது. மேலும் தேவாலய கட்டிடங்கள் மீது இயேசுவின் வாழ்க்கை வரலாறு ஒளிரவிடப்பட்டதை பொதுமக்கள் கண்டு ரசித்தனர். அமெரிக்கா கிறிஸ்துமஸை முன்னிட்டு மாய நகரமாக காட்சியளிக்கிறது.

மின்விளக்குகள் கொண்ட அலங்கரிக்கப்பட்டுள்ள சிலைகள் ஒளியை சிதறடித்து கண்களை கொள்ளை கொள்கின்றன. பண்டிகைக்கு புது வரவாக கண்கவர் வண்ணங்களில் ஏராளமான பொம்மைகள் அறிமுகம் செய்யப்பட்டுள்ளன. குழந்தைகள் உள்பட பெரியவர்கள் வரை அனைவரும் கரடிகள் மற்றும் கார்ட்டூன் பொம்மைகள் வாங்க ஆர்வம் காட்டுகின்றனர்.

Related Stories: