அந்தமானுக்கு தென் கிழக்கு-வடக்கு சுமத்ராவில் காற்று சுழற்சி வலுவடைந்து தமிழக கடலோர பகுதிக்கு வர வாய்ப்பு: வானிலை ஆய்வு மையம் தகவல்

சென்னை: அந்தமானுக்கு தென் கிழக்கு-வடக்கு சுமத்ராவில் காற்று சுழற்சி வலுவடைந்து வருகிறது. அது தமிழக கடலோர பகுதிக்கு வர வாய்ப்புள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. தமிழகத்தில் தற்போது வடகிழக்கு பருவமழை தீவிரம் அடைந்துள்ளது. கடந்த 9ம் தேதி தமிழகத்தின் ஊடாக சென்று மாண்டஸ் புயல் தற்போது அரபிக் கடல் பகுதியில் நிலை கொண்டு காற்றழுத்த தாழ்வு மண்டலமாக உள்ளது. இது மேற்கு திசையில் நகர்ந்து சோமாலியாவில் கரையைக் கடக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இந்த நிகழ்வின் காரணமாக கிழக்கு திசையில் இருந்து காற்று ஈர்க்கப்படுவதால், தமிழகத்தில் அனேக இடங்களில் மழை பெய்து வருகிறது. அதிகபட்சமாக குன்னூரில் 300 மிமீ மழை பெய்துள்ளது.

நீடாமங்கலம் 160மிமீ, திருமானூர் 150 மிமீ, நீலகிரி 140மிமீ, திருவையாறு 100 மிமீ, கொடநாடு, பரலியாறு 90மிமீ, திருக்கோயிலூர், புடலூர் 80மிமீ, முகையூர், கெடார், அறந்தாங்கி, கோவை 70மிமீ, தியாகதுருகம், பெரம்பலூர், திருக்காட்டுப் பள்ளி, திண்டுக்கல், கோத்தகிரி, மணலூர்பேட்டை 60மிமீ மழை பெய்துள்ளது. இந்நிலையில், அந்தமானுக்கு தென் கிழக்கு பகுதியிலும், வடக்கு சுமத்ரா கடல் பகுதியில் தற்போது ஒரு காற்று சுழற்சி உருவாகியுள்ளது. அது மேலும் வலுவடைந்து வட மேற்கு திசையில் நகர்ந்து தமிழக கடலோரப் பகுதிக்கு வரும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. அத்துடன் கிழக்கு திசையில் இருந்து வீசும் காற்றின் வேகம் மாறுபாடு காரணமாக தமிழகத்தில் மழை நீடிக்கும். அதன் காரணமாக 18ம் தேதி வரை தமிழகம், புதுச்சேரி காரைக்கால் பகுதிகளில் லேசானது முதல் மிதமான மழை பெய்யும்.

Related Stories: