திருவாலங்காட்டில் வீட்டில் பதுக்கி வைத்திருந்த 400 கிலோ ஹான்ஸ் பறிமுதல்: ஒருவர் கைது

திருத்தணி: திருவாலங்காடு பகுதியில் வீட்டில் பதுக்கிவைத்திருந்த போதை பொருட்களை பறிமுதல் செய்து ஒருவரை கைது செய்தனர். திருத்தணி அடுத்த திருவாலங்காட்டில் உள்ள ஒரு வீட்டில் ஹான்ஸ் உள்ளிட்ட போதை பொருட்கள் பதுக்கிவைத்து  விற்பனை செய்யப்படுவதாக திருவள்ளூர் மாவட்ட போலீஸ் எஸ்பி.ஷீபாஸ் கல்யாணுக்கு ரகசிய தகவல் கிடைத்தது.

இதையடுத்து அவரது உத்தரவின்படி, திருத்தணி போலீஸ் டிஎஸ்பி விக்னேஷ் மேற்பார்வையில், திருவாலங்காடு போலீஸ் இன்ஸ்பெக்டர் அண்ணாதுரை, உதவி ஆய்வாளர் பூபாலன் ஆகியோர் திருவாலங்காடு தெற்குமாட வீதி ஓம் பிரகாஷ் என்பவரின் வீட்டில் சோதனை செய்தனர். அப்போது அந்த வீட்டில் வாடகைக்கு இருந்துவரும் திருநெல்வேலி மாவட்டம் குட்டம் கிராமம் ஆதித்யா நகரை சேர்ந்த சிவானந்தம் என்பவர் போதை பொருட்களை பதுக்கிவைத்து விற்பனை செய்து வந்தது தெரிந்தது.

இதையடுத்து அவரது வீட்டில் இருந்து 400 கிலோ ஹான்ஸ் உள்பட போதை பொருட்களை பறிமுதல் செய்தனர். இதுசம்பந்தமாக திருவாலங்காடு போலீசார் வழக்குபதிவு செய்து, சிவானந்தத்தை கைது செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

Related Stories: