வரும் காலங்களில் இனிமேல் யாரும் சிஎம்டிஏ அனுமதியின்றி கட்டிடம் கட்டமுடியாது: அமைச்சர் முத்துசாமி பேச்சு

சென்னை: சிஎம்டிஏ அனுமதி இல்லாமல் இனிவரும் காலங்களில் யாரும் கட்டிடம் கட்ட முடியாது என, வீட்டுவசதி மற்றும் நகர்ப்புற வளர்ச்சித்துறை அமைச்சர் முத்துசாமி தெரிவித்துள்ளார். சென்னை கோயம்பேட்டில் உள்ள சென்னை பெருநகர வளர்ச்சி குழும அலுவலகத்தில் உதவி இயக்குனர்களுக்கான திறன் மேம்பாட்டு பயிற்சியினை வீட்டுவசதி மற்றும் நகர்ப்புற வளர்ச்சித்துறை அமைச்சர் முத்துசாமி நேற்று தொடங்கி வைத்தார்.

பின்னர் செய்தியாளர்களை சந்தித்த அமைச்சர் முத்துசாமி கூறுகையில், ‘‘சிஎம்டிஏவில் அதிக காலிப்பணியிடங்கள் இருப்பதால், அதிகாரிகளுக்கு பணிச்சுமை அதிகரித்துள்ளது. அதனை குறைக்க நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது. அந்த காலிப்பணியிடங்களை குறைக்கும் வகையில் 27 உதவி இயக்குனர்கள் பணி நியமனம் செய்யப்பட்டு, அவர்களுக்கு பயிற்சி தொடங்கியிருக்கிறது. எதிர்காலத்தில் சிஎம்டிஏ அனுமதியின்றி எந்த கட்டிடமும் கட்டப்படாது என்பது உறுதி. கிளாம்பாக்கத்தில் கட்டப்பட்டு வரும் பேருந்து நிலையம் பொங்கலுக்குள் திறக்கப்படும் என நம்புகிறோம். உதயநிதி ஸ்டாலின் அரசியல் ரீதியாக ஆற்றிய பணிகள் அனைத்தும் மிகச்சிறப்பாக இருந்தது. அவர் என்ன செய்தாலும் சிறப்பாக செய்வார் என்ற நம்பிக்கை மக்களுக்கு இருக்கிறது’’ என தெரிவித்தார்.

Related Stories: