பிளேடால் கழுத்தை அறுத்து கொள்ளையன் தற்கொலை முயற்சி: எழும்பூர் நீதிமன்ற வளாகத்தில் பரபரப்பு

சென்னை: எழும்பூர் நீதிமன்றத்தில் திருட்டு வழக்கில் ஆஜர்படுத்தப்பட்ட கொள்ளையன் ஒருவர் திடீரென பிளேடால் கழுத்தை அறுத்து தற்கொலை முயற்சி மேற்கொண்டார். இதனால் சிறிது நேரம் அங்கு பரபரப்பு ஏற்பட்டது. சென்னை அயனாவரம் வெள்ளாளர் தெருவை சேர்ந்தவர் சங்கர் (30). இவர் மீது திருட்டு, வழிப்பறி உள்ளிட்ட 10க்கும் மேற்பட்ட வழக்குகள் உள்ளன. தற்போது திருட்டு வழக்கு ஒன்றில் கோவை சிறையில் அடைக்கப்பட்டிருந்தார்.

கொளத்தூர் காவல் நிலைய எல்லையில் நடந்த திருட்டு வழக்கில் கோவை சிறையில் இருந்த சங்கரை நேற்று முன்தினம் போலீசார் எழும்பூர் நீதிமன்றனத்தில் ஆஜர்படுத்தினர். அப்போது, திருட்டு வழக்கை விசாரித்த மாஜிஸ்திரேட் வழக்கு விசாரணையை தள்ளிவைத்தார். பிறகு போலீசார் கொள்ளையன் சங்கரை சிறைக்கு அழைத்து செல்ல முயன்றனர். அப்போது யாரும் எதிர்பார்க்காத நிலையில் கொள்ளையன் சங்கர், கையில் மறைத்து வைத்திருந்த பிளேடால் தனது கழுத்தை அறுத்து தற்கொலைக்கு முயற்சி செய்தார். இதை சற்றும் எதிர்பார்க்காத போலீசார் சங்கரிடம் இருந்து பிளேடை பறிமுதல் செய்தனர்.

பிறகு ரத்த வெள்ளத்தில் இருந்த சங்கரை மீட்டு சிகிச்சைக்காக ராஜிவ் காந்தி அரசு பொது மருத்துவமனையில் போலீசார் அனுமதித்தனர். அங்கு கழுத்தில் தையல்கள் போடப்பட்டு உள் நோயாளியாக அனுமதிக்கப்பட்டுள்ளார். இதுகுறித்து எழும்பூர் போலீசார் வழக்கு பதிவு ெசய்து விசாரணை நடத்தி வருகின்றனர். நீதிமன்ற வளாகத்தில் கொள்ளையன் ஒருவர் பிளேடால் கழுத்தை அறுத்து தற்கொலைக்கு முயன்ற சம்பவத்தால் அப்பகுதியில் சிறிது நேரம் பரபரப்பு ஏற்பட்டது.

Related Stories: