மாண்டஸ் புயல் பாதிப்பில் சிறப்பாக செயல்பட்ட ஊழியர்களுக்கு பாராட்டு: தண்டையார்பேட்டை மண்டல குழுவில் தீர்மானம்

தண்டையார்பேட்டை: மாண்டஸ் புயல் பாதிப்பில் சிறப்பாக செயல்பட்ட மாநகராட்சி ஊழியர்கள், அதிகாரிகளுக்கு பாராட்டு தெரிவித்து மண்டல குழு கூட்டத்தில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது. சென்னை மாநகராட்சி 4வது மண்டலம், ஆர்.கே.நகர், பெரம்பூர் ஆகிய தொகுதிகளுக்கு உட்பட்ட 34 முதல் 48வது வார்டு வரையிலான மாமன்ற உறுப்பினர்கள் கூட்டம் தண்டையார்பேட்டை திருவொற்றியூர் நெடுஞ்சாலையில் உள்ள மாநகராட்சி மண்டல அலுவலகத்தில் நடந்தது. கூட்டத்திற்கு மண்டல குழு தலைவர் நேதாஜி கணேசன் தலைமை வகித்தார். மண்டல அதிகாரி மதிவாணன் முன்னிலை வகித்தார்.

கூட்டத்தில் திமுக, காங்கிரஸ், மதிமுக, கம்யூனிஸ்ட், விடுதலை சிறுத்தைகள் கட்சிகளின் மாமன்ற உறுப்பினர்கள் கலந்துகொண்டு தங்கள் வார்டுகளில் உள்ள மக்கள் பிரச்னைகள் குறித்து எடுத்துரைத்தனர். கடந்த வாரம் சென்னையை தாக்கிய மாண்டஸ் புயல் பாதிப்பில் சிறப்பாக பணியாற்றிய  மாநகராட்சி ஊழியர்கள், குடிநீர் வாரிய ஊழியர்கள், தூய்மைப்பணியாளர்கள் மற்றும் அதிகாரிகளுக்கு நன்றி தெரிவித்து கூட்டத்தில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.  

இதை தொடர்ந்து பழுதடைந்த கட்டிடங்களை சீர் செய்வது, பூங்காக்களை சீரமைப்பது, சாலைகளை மேம்படுத்துவது, மக்களின் முக்கிய அடிப்படை பிரச்னைகளை தீர்ப்பது உள்ளிட்ட 30 தீர்மானங்கள் ரூ.3 கோடியே 80 லட்சம் மதிப்பீட்டில் நிறைவேற்றப்பட்டன. நிறைவேற்றப்பட்டன. அப்போது மாமன்ற உறுப்பினர்கள் தங்கள் வார்டுகளில் உள்ள பிரச்னைகளை சரி செய்து தர கோரிக்கை வைத்தனர். இதை உடனடியாக செய்து தர அதிகாரிகளுக்கு உத்தரவிடப்பட்டது. கூட்டத்தில் மாநகராட்சி, சுகாதாரத்துறை, குடிநீர் வாரியம், மின்வாரிய அதிகாரிகள் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.

Related Stories: