திருப்பூர், கோவை மாவட்டங்களில் நலிந்து வரும் விசைத்தறி தொழில்: பருத்தி நூல் ஏற்றுமதிக்கு ஒன்றிய அரசு தடை விதிக்க வேண்டும்

திருப்பூர்: விசைத்தறி தொழில் நலிந்து வருவதால் திருப்பூர், கோவை மாவட்டங்களில் விசைத்தறிகள் எடைக்கு விற்கப்படுவதாக உற்பத்தியாளர்கள் வேதனை தெரிவித்துள்ளனர். திருப்பூர், கோவை மாவட்டங்களில் 2,50,000 விசைத்தறிகள் மற்றும் 20,000 நாடா இல்லா விசைத்தறிகள் இயங்கி வருகின்றன. இவற்றின் மூலம் நாள்தோறும் ரூ.100 கோடி மதிப்புள்ள 2 கோடி மீட்டர் கானா துணி உற்பத்தி செய்யப்படுகிறது.

விசைத்தறி தொழிலை நம்பி நேரடியாகவும், மறைமுகவாகவும் சுமார் 5 லட்சம் பேர் வேலைவாய்ப்பு பெற்று வருகின்றனர். இந்த நிலையில் தற்போது நிலவும் சீரற்ற நூல் விலை, மின்கட்டணம், மூலப்பொருட்களின் விலை உயர்வு, தொழிலாளர்களின் ஊதிய உயர்வு, ஆட்கள் பற்றாக்குறை, உற்பத்தி செலவுக்கு ஏற்ப துணி விலை கிடைக்காதது, வங்கிக் கணக்கு திரும்ப செலுத்த முடியாத நிலை உள்ளிட்ட பல்வேறு காரணங்களால் விசைத்தறி தொழில் பெரும்பாதிப்பு அடைந்துள்ளது.

கடந்த 2 மாதங்களாக மாதத்திற்கு நூற்றுக்கும் மேற்பட்ட தறிகள் விற்பனை செய்யப்படுவதாக உற்பத்தியாளர்கள் தெரிவிக்கின்றனர். ஒரு லட்சம் முதல் ஒன்றரை லட்சம் ரூபாய் மதிப்புள்ள தறி ரூ.65,000 வாங்கப்பட்டு வந்த நிலையில் தற்போது ரூ.30,00 வரை மட்டுமே வாங்கப்படுவதாக கவலையுடன் தெரிவிக்கின்றனர்.

மேலும் விசைத்தறியை உடைத்து உதிரி பாகங்களை கிலோவுக்கு ரூ.55 முதல் ரூ.60-க்கு விற்க வேண்டிய அவல நிலைக்கும் தள்ளப்பட்டுள்ளதாகவும் வேதனை தெரிவித்தனர். விசைத்தறி தொழிலை பாதுகாக்க பருத்து நூல் ஏற்றுமதிக்கு ஒன்றிய அரசு தடை விதிக்க வேண்டும் என்றும் உள்நாட்டில் ஆண்டு முழுவதும் சீரான விலையில் பஞ்சு நூல் கிடைக்க வழிவகை செய்ய வேண்டும் என்றும் கோரிக்கை விடுத்துள்ளனர்.

Related Stories: