பாசத்தோடு வளர்த்ததை பிரிய மனமில்லாததால் ஜல்லிக்கட்டு காளை, சண்டை கிடாவை தங்கைக்கு சீதனமாக வழங்கிய அண்ணன்: மானாமதுரை திருமண விழாவில் நெகிழ்ச்சி

மானாமதுரை: மானாமதுரையில் தங்கையின் திருமணத்திற்கு பரிசாக, அவர் வளர்த்த ஜல்லிக்கட்டு காளை, சண்டை கிடா போன்றவற்றை சீதனமாக அண்ணன் வழங்கிய நெகிழ்ச்சி சம்பவம் நடந்துள்ளது. சிவகங்கை மாவட்டம், மானாமதுரையை சேர்ந்த தம்பதி சுரேஷ் - செல்வி. இவர்களது மகன் ராயல், மகள் விரேஸ்மா. விவசாய குடும்பத்தைச் சேர்ந்த இவர்களது வீட்டில், ஜல்லிக்கட்டு காளை, சண்டை கிடா, கன்னி நாய்கள், சண்டை சேவல் போன்றவற்றை வளர்த்து வந்தனர். விரேஸ்மா இவற்றை மிகுந்த பாசம் வைத்து கவனித்து வந்தார்.  சமீபத்தில் ஜல்லிக்கட்டு காளை, சண்டை கிடா இறந்ததால் பெரும் சோகத்திற்கு ஆளானார். கன்னி நாய்கள், சண்டை சேவலை விரேஸ்மா கவனித்து வந்தார்.

இந்நிலையில் விரேஸ்மாவிற்கு மாப்பிள்ளை பார்த்து திருமண ஏற்பாடுகள் செய்யப்பட்டன. தன் வளர்ப்பு பிராணிகளை விட்டுச் செல்வதால் மிகுந்த கவலையுடன் விரேஸ்மா காணப்பட்டார். இதை கண்டு இவரது அண்ணன் ராயல் வருந்தினார். நேற்று முன்தினம் விரேஸ்மாவிற்கு திருமணம் நடந்தது. தங்கையை மகிழ்விக்கும் வகையில், திடீரென யாரும் எதிர்பார்க்காத வகையில் அவர் பார்த்து வளர்த்த கன்னி நாய்கள், சண்டை சேவலுடன், ஒரு ஜல்லிக்கட்டு காளை மற்றும் சண்டை கிடாவும் வாங்கி, திருமண அரங்கிலேயே சீதனமாக வழங்கி அசத்தினார். இதை பார்த்து அனைவரும் நெகிழ்ந்தனர். மணமேடைக்கே மாடு, கிடா, கன்னி நாய்கள், சேவல் கொண்டு வரப்பட்டது. அவற்றுக்கு மணமக்கள் முத்தமிட்டு கொஞ்சினர். மணப்பெண் விரேஸ்மா கூறுகையில், ‘‘பாசத்துடன் வளர்த்து வந்த உயிர்களை பிரிகிறோமே என்ற கவலை இருந்தது. இந்த சீதனம் எத்தனை கோடி கொட்டிக் கொடுத்தாலும் கிடைக்காத ஒன்று’’ என்றார். ராயல் கூறுகையில், ‘‘ தங்கையின் ஆசையை நிறைவேற்றியது மிகுந்த சந்தோஷம் அளிக்கிறது’’ என்றார்.

Related Stories: