புதிய அணையால் பாதிப்பில்லை என தொழில்நுட்ப குழு கூறியிருந்த நிலையில் சென்னையில் தமிழக-கேரள மாநில தலைமை செயலாளர்கள் திடீர் சந்திப்பு: முல்லைப்பெரியாறு அணை குறித்து விவாதித்ததாக தகவல்

சென்னை: முல்லைப் பெரியாறு அருகே புதிய அணை கட்டுவதால் சுற்றுச்சூழலுக்கு பாதிப்பு இல்லை என கேரள அரசின் தொழில்நுட்ப குழு கூறியுள்ள நிலையில், தமிழக, கேரள மாநில தலைமை செயலாளர்கள் சென்னையில் நேற்று திடீரென சந்தித்து பேசினர். சென்னை, நுங்கம்பாக்கத்தில் உள்ள தனியார் நட்சத்திர விடுதியில் தமிழக தலைமை செயலாளர் இறையன்பு, கேரள தலைமை செயலாளர் ஜாய் ஆகியோர் நேற்று மாலை திடீரென சந்தித்து பேசினர். இந்த சந்திப்பின்போது முல்லைப் பெரியாறு அணையில் நீர் தேக்கத்தின் அளவு மற்றும் முல்லைப் பெரியாறு அணையில் கேரள மக்களின் பாதுகாப்பிற்காக புதிய அணை கட்டப்படுமென கேரள ஆளுநர் ஆரிப் கான் சட்டப்பேரவை உரையில் கூறியிருந்தது பற்றியும், இதற்கு தமிழக அரசு கடும் கண்டனத்தை பதிவு செய்திருந்தது பற்றியும் விவாதிக்கப்பட்டது.

மேலும், தமிழக அரசு அணை பாதுகாப்பு சட்டத்தின் அடிப்படையில் முல்லைப் பெரியாறில் பராமரிப்பு பணியை குறிப்பிட்ட காலத்துக்குள் மேற்கொள்ள, அணை பாதுகாப்பு கண்காணிப்பு குழுவுக்கு உத்தரவிட வேண்டும். முல்லைப் பெரியாறு அணையை பலப்படுத்தும் வகையில் நிலுவையில் உள்ள பராமரிப்பு பணிகளை மேற்கொள்வதற்கு ஒத்துழைப்பு வழங்க கேரள அரசு முழு ஒத்துழைப்பு வழங்க வேண்டும் என்றும் தமிழக அரசு சார்பில் கோரிக்கை வைக்கப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது.

குறிப்பாக, பராமரிப்பு பணிகளை மேற்கொள்ள அனைத்துவிதமான ஒத்துழைப்பும் தமிழகத்துக்கு அளிக்க வேண்டுமென நீதிமன்றத்தில் தமிழக அரசு கூறி இருந்தது. இது குறித்து இரு மாநில தலைமை செயலாளர்கள் பேச உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. கேரள மாநிலம் இடுக்கி மாவட்டத்தில் உள்ள முல்லைப் பெரியாறு அணையில் புதிய  அணை கட்டினால் சுற்றுச்சூழலுக்கு பாதிப்பு ஏற்படாது என கேரள அரசால்  நியமிக்கபட்ட தொழில்நுட்ப குழு கூறியிருந்த நிலையில் இரண்டு மாநில தலைமை செயலாளர்களும் சென்னையில் சந்தித்து பேசியுள்ளது முக்கியத்துவம் வாய்ந்ததாக கருதப்படுகிறது.

Related Stories: