மாண்டஸ் புயல் பாதித்த இடங்களில் ஆய்வு பாதிக்கப்பட்ட மக்களுக்கு நிவாரணம் வழங்கப்படும்: அமைச்சர் அனிதா ராதாகிருஷ்ணன் பேட்டி

சென்னை: மாண்டஸ் புயலால் பாதிக்கப்பட்டவர்களுக்கு உரிய நிவாரணம் வழங்கப்படும் என்று அமைச்சர் அனிதா ராதாகிருஷ்ணன் கூறினார். மாண்டஸ் புயல் மாமல்லபுரம் அருகே கரையை கடந்ததையொட்டி, கல்பாக்கம் அருகே உள்ள கடலோர பகுதிகளான   புதுப்பட்டினம் குப்பம், உய்யாலி குப்பம், கடலூர் பெரியகுப்பம், சின்ன குப்பம், வடபட்டினம், பழைய நடுக்குப்பம் உள்ளிட்ட பகுதிகளை நேற்று மீன்வளத்துறை அமைச்சர் அனிதா ராதாகிருஷ்ணன் பார்வையிட்டார்.

பிறகு உய்யாலிகுப்பம் பகுதியில் செய்தியாளர்களை சந்தித்த அமைச்சர் அனிதா ராதாகிருஷ்ணன் கூறுகையில், ‘‘மாண்டஸ் புயலால் பாதிக்கப்பட்டுள்ள மீன்பிடி படகுகள் மற்றும் வலைகள் குறித்து உரிய ஆய்வு மேற்கொண்டுள்ளோம். இந்த ஆய்வு குறித்து முதல்வரின் கவனத்திற்கு கொண்டு சென்று பாதிக்கப்பட்டவர்களுக்கு உரிய நிவாரணம் வழங்கப்படும். அனைத்து மீனவர் பகுதிகளிலும் மீனவர்களை பாதுகாக்கும் விதமாக தூண்டில் வளைவு ஏற்படுத்தும் திட்டம் உள்ளது. நீதிமன்றத்தில் பசுமை தீர்ப்பாயம் வழக்கு உள்ளது. அது சரியானதும் உடனடியாக தூண்டில் வளைவு அமைக்க உரிய நடவடிக்கை எடுக்கப்படும்’’ என்றார்.அப்போது, காஞ்சிபுரம் தெற்கு மாவட்ட திமுக செயலாளர் க.சுந்தர் எம்எல்ஏ மற்றும் செங்கல்பட்டு கலெக்டர் ராகுல்நாத் உடன் இருந்தனர்.

Related Stories: