காசி தமிழ் சங்கமம் நிகழ்ச்சியை முன்னிட்டு குமரியிலிருந்து வாரணாசிக்கு சிறப்பு ரயில் இயக்கப்படுமா?: பயணிகள் எதிர்பார்ப்பு

நாகர்கோவில்: காசி தமிழ் சங்கம நிகழ்ச்சியை சிறப்பிக்கும் வகையில் கன்னியாகுமரியில் இருந்து வாரணாசிக்கு சிறப்பு ரயில் அறிவிக்க வேண்டும் என்று பயணிகள் சங்கத்தினர் வலியுறுத்தி உள்ளனர். சுதந்திர தின அமிர்த பெருவிழாவின் ஒரு பகுதியாக காசி தமிழ் சங்கமம் - 2022 நிகழ்ச்சி, உத்தர பிரதேச மாநிலம் வாரணாசியில் தொடங்கியுள்ளது. காசிக்கும், தமிழகத்துக்கும் இடையிலான பண்டைய கலாச்சாரம், பாரம்பரியம் மற்றும் அறிவு தொடர்பை மீண்டும் கண்டறியவும், கொண்டாடவும் வசதியாக காசி தமிழ் சங்கமம் நிகழ்ச்சி நடைபெறுகிறது.

நவம்பர் 16 ம்தேதி தொடங்கிய சங்கம நிகழ்ச்சி, டிசம்பர் 19 வரை ஒரு மாதம் நடைபெறுகிறது. இந்தியாவின் தென் கோடியில் அமைந்துள்ள புண்ணிய பூமி கன்னியாகுமரி ஆகும். காசி, ராமேஸ்வரத்துக்கு அடுத்தபடியாக கன்னியாகுமரிக்கு அதிகளவில் புனித நீராட பக்தர்கள் வருகிறார்கள்.

1979-ல் அகல பாதை ரயில் போக்குவரத்து துவங்கியதில் இருந்து இதுவரை கன்னியாகுமரியில் இருந்து நேரடியாக வாரணாசி, துவாரகா, மதுரா, சீரடி, அயோத்தி, பூரி போன்ற பிரசித்தி பெற்ற கோவில்களுக்கு செல்ல ரயில் வசதி இல்லை. தற்போது கன்னியாகுமரி முதல் சென்னை வரை இருவழிபாதை பணிகள் 95 சதவீதம் முடிவு பெற்றுள்ள நிலையில் கன்னியாகுமரியை மையமாக வைத்து இனி மதுரை, சென்னை வழியாக நெடுந்தூர ரயில்களை இயக்க முடியும். இவ்வாறு நெடுந்தூர ரயில்கள் இயக்கப்படும் போது, தமிழகத்தில் தென் மாவட்ட பயணிகளுக்கு பயனுள்ளதாக இருக்கும். தற்போது தமிழ்நாட்டின் தென் மாவட்ட பகுதிகளிலிருந்து வாரணாசிக்கு செல்ல வேண்டுமானால் சென்னை சென்றால் மட்டுமே செல்ல முடியும்.

தமிழகத்தில் உள்ள மிக மிக முக்கிய இருவழிப்பாதையாக நாகர்கோவில், திருநெல்வேலி, விருதுநகர், மதுரை, திண்டுக்கல், திருச்சி, விருத்தாசலம், விழுப்புரம் வழித்தடம் வழியாகவும் வாரணாசிக்கு செல்ல ரயில் வசதி இல்லை என்பது கவலையான விஷயமாகும்.

இந்தியாவின் தென்கோடி முனையான கன்னியாகுமரியிலிருந்து மதுரை, திருச்சி, சென்னை வழியாக வாரணாசிக்கு வாராந்திர ரயிலை உடனடியாக இயக்க வேண்டும். ரயில்வே துறை வரலாற்றை நினைவுகளை சிறப்பிக்கும் விதமாக பல்வேறு ரயில்களுக்கு வரலாற்று பெயர்களை சூட்டி இயக்கி வருகிறது. காசி தமிழ் சங்கமம் நிகழ்ச்சியை சிறப்பிக்கும் வகையில் கன்னியாகுமரியிலிருந்து மதுரை, சென்னை வழியாக வாரணாசிக்கு ரயில் இயக்கி,  இந்த ரயிலுக்கு காசி தமிழ் சங்கமம் எக்ஸ்பிரஸ் என பெயரிட வேண்டும் என்று குமரி மாவட்ட ரயில் பயணிகள் சங்கத்தினர் வலியுறுத்தி உள்ளனர்.

Related Stories: