உச்சநீதிமன்ற நீதிபதியாக பதவியேற்றார் தீபங்கர் தத்தா: நீதிபதி டி.ஒய்.சந்திரசூட் பதவிப்பிரமாணம் செய்து வைத்தார்..!!

டெல்லி: உச்சநீதிமன்ற நீதிபதியாக தீபங்கர் தத்தா பதவியேற்றுக் கொண்டார். தீபங்கர் தத்தாவுக்கு உச்சநீதிமன்ற தலைமை நீதிபதி டி.ஒய்.சந்திரசூட் பதவிப்பிரமாணம் செய்து வைத்தார். இந்நிகழ்ச்சியில் உச்ச நீதிமன்ற நீதிபதிகள், வழக்கறிஞர்கள் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர். இதன் மூலம் உச்சநீதிமன்ற நீதிபதிகளின் எண்ணிக்கை 28-ஆக உயர்ந்தது. மும்பை உயர்நீதிமன்ற தலைமை நீதிபதியாக இருந்த தீபங்கர் தத்தா 2030 பிப். வரை உச்சநீதிமன்ற நீதிபதியாக பதவி வகிப்பார்.

மும்பை உயா்நீதிமன்ற தலைமை நீதிபதி தீபாங்கா் தத்தாவை உச்சநீதிமன்ற நீதிபதியாக நியமிக்க, கடந்த செப்டம்பரில் அப்போதைய உச்சநீதிமன்ற தலைமை நீதிபதி யு.யு.லலித் தலைமையிலான கொலீஜியம் பரிந்துரைத்திருந்தது. தொடர்ந்து, உச்சநீதிமன்ற நீதிபதியாக தீபாங்கா் தத்தா நியமிக்கப்பட்டுள்ளதாக, ஒன்றிய சட்ட அமைச்சகம் அறிவித்தது. கடந்த 1965ல் பிறந்தவரான தத்தா, கொல்கத்தா உயா்நீதிமன்ற மறைந்த முன்னாள் நீதிபதி சலீல்குமாா் தத்தாவின் மகன் ஆவாா்.

1989ல் கொல்கத்தா பல்கலைக்கழகத்தில் சட்டப்படிப்பு முடித்த இவா், அதே ஆண்டில் வழக்குரைஞராக பதிவு செய்தாா். உச்சநீதிமன்றத்திலும், பல்வேறு உயா்நீதிமன்றங்களிலும் அரசியல் சாசனம் மற்றும் உரிமையியல் சாா்ந்த விவகாரங்களில் வழக்கறிஞராக பணி மேற்கொண்டாா். 2006ல் கொல்கத்தா உயா்நீதிமன்ற நிரந்தர நீதிபதியாக நியமிக்கப்பட்டு, பின்னா் 2020 ஏப்ரலில் மும்பை உயா்நீதிமன்ற தலைமை நீதிபதியாக பதவி உயா்வு பெற்றாா்.

தற்போது 57 வயதாகும் தத்தாவுக்கு, 2030 பிப்ரவரி வரை உச்சநீதிமன்றத்தில் பதவிக்காலம் உள்ளது. உச்சநீதிமன்ற நீதிபதியின் ஓய்வு வயது 65 என்பது குறிப்பிடத்தக்கது. உச்ச நீதிமன்ற நீதிபதியாக திபங்கர் தத்தா பதவியேற்றதை அடுத்து, உச்ச நீதிமன்ற நீதிபதிகளின் எண்ணிக்கை 28 ஆக உயர்ந்துள்ளது. உச்சநீதிமன்றத்தில் தலைமை நீதிபதி உள்பட அனுமதிக்கப்பட்ட மொத்த நீதிபதி இடங்களின் எண்ணிக்கை 34 ஆகும்.

Related Stories: