அரிமளம், திருமயம் பகுதிகளில் நீர்நிலைகள் நிரம்பினாலும் விவசாயத்தில் ஆர்வம் குறைவு

*விவசாய நிலங்கள் கருவேல காடுகளாக மாறிய அவலம்

திருமயம் : அரிமளம், திருமயம் பகுதிகளில் நீர்நிலைகள் நிரம்பினாலும் விவசாயம் செய்யும் நிலையில் வயல்களும் இல்லை, விவசாயிகளும் இல்லை என சமூக ஆர்வலர்கள் வேதனை தெரிவிக்கின்றனர்.புதுக்கோட்டை மாவட்டம் அரிமளம், திருமயம் பகுதிகள் உள்ள நிலப்பரப்புகள் பெரும் பாலானவற்றை அரசுகையகப்படுத்தி தைலமரங்கள் நடவு செய்துவரும் நிலையில் மீதமிருக்கும் நிலங்கள் அனைத்து பயிர்களுக்கும் ஏற்றவையாகும். இதனால் அப்பகுதியில் விவசாயமே முக்கியதொழில். இங்கு வாழும் மக்கள் விவசாயத்தையே நம்பி இருந்த நிலையில் கடந்த சில ஆண்டுகளாக நிலவிவரும் வறட்சி அப்பகுதி விவசாயிகள் வாழ்க்கை மட்டுமல்லாது சிறுவணிகர்கள் முதல் அப்பகுதி மக்களை நம்பி தொழில் செய்து அனைத்து தொழில்களும் பின்னடைவை சந்தித்து வருகிறது.

இதனால் படித்த இளைஞர்கள் வெளிநாடுகளுக்கு சென்று விட்ட நிலையில் சிலர் கூலிதொழிலாளியாக பக்கத்து மாவட்டம், மாநிலங்களுக்கு சென்றுவிடும் அவலம் நடந்து வருகிறது. இதனை சரிசெய்ய அதிகாரிகள், தொண்டு நிறுவனம் நடவடிக்கை எடுக்காதது அப்பகுதி இளைஞர்களின் எதிர்கால வாழ்க்கையை கேள்விகுறியாக்கி உள்ளது.

விவசாயம் பொய்த்ததற்கான காரணம்: அரிமளம், திருமயம் பகுதியில் உள்ள வௌ்ளாறு, பாம்பாறுகள் பருவ காலங்களில் மட்டுமே நீர்வரத்து உள்ளது வழக்கம். இதனால் அப்பகுதி விவசாயிகளுக்கு இந்த ஆறுகளால் பெரியபலன்கள் ஏதும் இல்லை. பருவகாலத்தில் பெய்யும் மழைநீரை கண்மாய், குளங்களில் சேமித்துவைத்து விவசாயம் செய்து வந்தனர்.

இந்நிலையில் கடந்த 15 ஆண்டுகளுக்கு மேலாக புதுக்கோட்டை மாவட்டத்தில் மழையளவு பெருமளவு குறைந்ததோடு அரிமளம், திருமயம் பகுதியில் வழக்கத்தைவிட மிககுறைந்த அளவே மழை பெய்து வருகிறது. இதனால் நீர்நிலைகள் வறண்டதோடு நிலத்தடிநீர் மட்டமும் 300 அடிக்குகீழ் சென்றுவிட்டது. இதனிடையே ஒவ்வொருவருடமும் பருவமழையை நம்பிவிவசாயம் செய்த விவசாயிகள் ஏமாற்றத்தையும், பெரும் நஷ்டத்தையும் சந்தித்து வந்தனர்.

இந்நிலையில் ஒருகட்டத்தில் விவசாயகடன் சுமை, அடுத்தடுத்த விவசாய தோல்விகளை சமாளிக்க முடியாத விவசாயிகள் விவசாயத்தில் இருந்து விலகி வாழ்வதற்காக எந்த தொழிலையும் செய்யும் நிலைக்கு தள்ளப்பட்டனர். தற்போது அரிமளம், திருமயம் பகுதிகளில் கிணறுகளும் நீருக்காக ஏங்கும் நிலையில் ஒருசிலர் ஆழ்துளை கிணறு மூலம் விவசாயம் செய்து வருகின்றனர்.

கூலிஆட்கள் கிடைப்பதில் சிக்கல்:

கவுரவத்திற்காக குலத் தொழிலான விவசாயத்தை விடக்கூடாது என ஒருசில விவசாயிகள் விவசாயத்தில் முழு மூச்சுடன் ஈடுபட்டுவரும் நிலையில் சில விவசாய பணிகளுக்கு கூலி ஆட்கள் கிடைப்பது பெரும் சிரமமாக உள்ளதாக தெரிவித்தனர். இதனால் வழக்கத்தைவிட அதிக கூலிகொடுத்து வெளி மாவட்டங்களில் இருந்து கூலிக்கு ஆட்கள் கூட்டிவரும் நிலை ஏற்பட்டுள்ளது.

இதனிடையே விவசாயத்தில் பல தொழில் புரட்சிகள் வந்தாலும் வரப்புவெட்ட, களைஎடுக்க, உரம், பூச்சிமருத்துகள் தெளிக்க உள்ளிட்ட பணிகளுக்கு மனிதசக்தி தேவைப்படுகிறது. அப்போது கூலிஆட்களை பிடிக்க விவசாயிகள் படும்பாடு சொல்லிமாளாது. அதேசமயம் விவசாயம் செய்வதில் தற்போதுள்ள இளைய தலைமுறையினர் ஆர்வம் காட்டுவதில்லை என்பதும் ஒரு காரணம்.

மிஞ்சுவது உழைப்புமட்டும் தான்:

எந்தஒருதொழில் செய்தாலும் அந்ததொழிலில் லாபம், நஷ்டம் வருவது வழக்கம். ஆனால் தொடர்ந்து நஷ்டம் மட்டுமே கிடைப்பதால் அரிமளம், திருமயம் பகுதி விவசாயிகள் விவசாயத்திற்கு முழுக்கு போட்டுவருகின்றனர். உதாரணத்திற்கு தற்போது ஒரு ஏக்கருக்கு தோராயமாக ரூ.20 முதல் 25 ஆயிரம் வரை செலவாகிறது. இந்நிலையில் ஒரு ஏக்கர் நிலத்தில் 25 முதல் 30 மூட்டைநெல் வருவதாக வைத்துக் கொண்டால் அனைத்து செலவுகளும் போகவிவசாயிக்குரூ.5 ஆயிரம் லாபம் கிடைப்பதேகேள்விகுறிதான். இதனால் வருடம் முழுவதும் இரவுபகல் பாராமல் பாடுபடும் விசாயிக்கு மிஞ்சுவது உழைப்புமட்டும் தான் என விவசாயிகள் வேதனை தெரிவிக்கின்றனர்.

அதேசமயம் போதுமான நீர் இல்லாமல் காசுக்கு நீர்பாசனம் செய்யும் விவசாயிகளுக்கு எதுவும் மிஞ்சுவது இல்லை.கடையில் அரிசி வாங்கி சாப்பிடுவது சிறந்தது: ஒருகாலத்தில் கூட்டுகுடும்பங்கள் இருந்ததால் அனைவரும் விவசாய பணிகள் உள்ளிட்ட பணிகள் செய்ய வேண்டிய கட்டாயத்திற்கு தள்ளப்பட்டனர். ஆனால் அந்த நிலை தற்போது இல்லை.

பெரும்பாலும் கூட்டுகுடும்பங்களை பார்ப்பதே அரிதாக மாறிவரும் நிலையில், ஒரு குடும்பத்திற்கு தேவையான அரிசிக்கு விவசாயம் செய்ய வேண்டிய கட்டாயம் இல்லாமல் போனது. வறட்சி, பனி, மழை ஆகிய இன்னல்களை கடந்து விவசாயம் செய்து சாப்பிடுவதற்கு பதிலாக கடையில் அரிசி வாங்கி சாப்பிடுவது சிறந்தது என்ற மனநிலைக்கு வந்துவிட்டனர்.

சம்பாவா? குறுவையா?

கடந்தபல ஆண்டுகளாக அரிமளம், திருமயம் பகுதியில் நிலவிவரும் கடும் வறட்சி காரணமாக சம்பா நடவு என்ற ஒன்று மறைந்து போனது. தற்போது நடைபெறும் விவசாயம் சம்பா என கூறிகொண்டாலும் அது குறுவை சாகுபடியை ஒத்தே காணப்படுகிறது. சம்பா நடவு என்பது ஜூலை மாதம் தொடங்கி சுமார் 5 முதல் 6 மாதங்கள் வளர்ச்சியை கொண்ட நெல் பயிற்கள் சம்பா நடவு என கருதப்படுகிறது.

 

தற்போது நிலவும் பருவமாற்றம் காரணமாக சம்பா நடவு வளர்ச்சி 3 மாதங்களில் அறுவடையில் முடிந்து விடுவது குறிப்பிடத்தக்கது. எனவே அதனை சம்பா நடவு என அழைப்பதற்கு பதிலாக குறுவை சாகுபடி என்பதே சிறந்ததாகும்.நீர்நிலைகள் நிரம்பினாலும் புறந்தள்ளும் விவசாயிகள்: அரிமளம், திருமயம் பகுதியில் பருவநிலை மாற்றம் காரணமாக பருவமழை என்பதே இல்லாமல் போனது. அவ்வப்போது பெய்யும் மழையும் தொடர்ந்து பெய்யாததால் நீர்நிலைகளுக்கு நீர் வருவது கடினமாக உள்ளது. இதனால் நீர்நிலைகள் நம்பி விவசாயம் செய்வது என்பது அப்பகுதி விவசாயிகளுக்கு எட்டாத ஒன்றாக மாறிவிட்டது.

இதனிடையே ஆழ்துளை கிணறுகளை கொண்டு விவசாயம் நடைபெற்றாலும் ஒரு கிராமத்தில் உள்ள அனைத்து வயல்களுக்கும் தேவையான நீர் கிடைப்பதில்லை. இதனால் பெரும்பாலான விவசாயிகள் வயல்களை அப்படியே தரிசாக போட்டுவிட்டனர். இதனை தொடர்ந்து பரமரிப்பு இல்லாததால் விளைநிலைங்கள், நீர்நிலைகள் அனைத்தும் சீமைகருவேல மரங்கள் மண்டி காடுபோல் மாறிவிட்டது.

இந்நிலையில் தற்போது அரிமளம், திருமயம் பகுதிகளில் பருவமழை பெய்து கண்மாய்கள் நிரம்பினாலும் விவசாயம் செய்யும் நிலையில் வயல்களும் இல்லை, விவசாயிகளும் இல்லை என்பதே அப்பகுதி விவசாயிகளின் ஒற்றை குரலாக உள்ளது. எனவே சம்பத்தப்பட்ட அதிகாரிகள் விளை நிலங்களில் உள்ள சீமைகருவேல மரங்களை அகற்ற உதவி செய்ய வேண்டும் என விவசாயிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

Related Stories: