தமிழகத்தில் மழை நீடிக்கும் அந்தமான் அருகே மீண்டும் காற்றழுத்தம் உருவாகிறது: 16ம் தேதி தாழ்வு மண்டலமாக மாறும்; வானிலை ஆய்வு மையம் தகவல்

சென்னை: வட கிழக்கு பருவமழை தீவிரம் அடைந்ததை அடுத்து வங்கக் கடலில் வலுப்பெற்ற ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு மண்டலம், 9ம் தேதி அன்று மாண்டஸ் புயலாக மாறியது.அது சென்னை- மாமல்லபுரம் இடையே கரையைக் கடக்கும் என்று கணிக்கப்பட்டது. அதன்படி 9ம் தேதி இரவு 11 மணி அளவில் அந்த புயல் வலுவிழந்த நிலையில் தரைப் பகுதியை தொட்டது. பின்னர்  10ம் தேதி காலை 5.30 மணி வரை தரைப்பகுதியை கடந்து தாம்பரம்- காஞ்சிபுரம் வழியாக  சென்றது. அது காற்றழுத்த தாழ்வு மண்டலமாகவே நகர்ந்து சென்றது.

நேற்று காலையில் மேலும் வலுவிழந்து மேற்கு நோக்கி நகர்ந்து வேலூர், திருப்பத்தூர் பகுதியில் நீடித்து அங்கு நல்ல மழையை கொடுத்தது. திருப்பத்தூர் தெற்கு பகுதி ஜவ்வாது மலைப்பகுதியிலும் மழை பெய்தது. இதையடுத்து நேற்று மாலையில் மேற்கு நோக்கி நகர்ந்து அங்கிருந்து தெற்கு நோக்கி சுழன்று குமரிக் கடல் பகுதியை தொட்டு, மீண்டும் வடக்கு திசையில் திரும்பி நகர்ந்து தெற்கு ஆந்திரா, கர்நாடக பகுதிகளில் காற்றுடன் கூடிய மழைபெய்து மீண்டும் மேற்கு நோக்கி நேற்று இரவு பயணித்தது.

இதன் தொடர்ச்சியாக இன்று அந்த காற்றழுத்த தாழ்வு மண்டலம் மேற்கு நோக்கி நகர்ந்து  அரபிக் கடல் பகுதிக்குள் நுழையும். அதன் காரணமாக கிழக்கு திசையில்  இருந்து காற்றை உறிஞ்சத் தொடங்கும். கிழக்கு திசையில் இருந்து குளிர்ந்த காற்று தமிழகம் ஊடாக அரபிக் கடல் பகுதிக்கு செல்லும் போது தமிழகத்தில் இன்று பெரும்பாலான இடங்களில் மழை பெய்யும்.

பின்னர் அரபிக் கடலுக்குள் அந்த காற்றழுத்த  தாழ்வு மண்டலம் சென்ற பிறகு 13, 14ம் தேதிகளில் தமிழகத்தில் விட்டுவிட்டு மழை பெய்யும். 15ம் தேதி மழை பெய்வது நிற்கும் என்று கூறப்படுகிறது.

இதற்கிடையே, வங்கக் கடலில் அந்தமான் அருகே உருவாகியுள்ள காற்றழுத்த சுழற்சி 14, 15ம் தேதிகளில் தெற்கு மற்றும் மத்திய மேற்கு வங்கக் கடல் பகுதிக்கு நகர்ந்து வட இலங்கைக்கு 16ம் தேதி வந்து சேரும். அப்போது குமரிக் கடல் பகுதியில் நிலவும் வளி மண்டல கீழடுக்கு சுழற்சியும் இணைந்து காற்றழுத்த தாழ்வு மண்டலமாக வலுப்பெற்று,  அரபிக் கடல் நோக்கி நகரும்.

இதன் காரணமாக 17, 18, 19ம் தேதிகளில் டெல்டா மாவட்டங்கள், தென் மாவட்டங்களில் பலத்த மழை பெய்யும். இந்த மழை 24ம் தேதி வரை நீடிக்கும். இந்த நிகழ்வும் அரபிக் கடல் நோக்கி செல்லும் போதும் கிழக்கு பகுதியில் இருந்து காற்றை ஈர்க்கும் என்பதால் மழை நீடிக்கும். இந்த நிகழ்வு காற்றழுத்த தாழ்வு மண்டலமாக மட்டுமே நீடிக்கும் என்றும் எதிர்பார்க்கப்படுகிறது. இதனால் தமிழகத்தில் மழை நீடிக்கும். இவ்வாறு வானிலை ஆய்வு மண்டலம் தெரிவித்துள்ளது.

Related Stories: