கோயில்களில் போதியளவு நிதி இல்லையென்றால் முதலீடுகளை பயன்படுத்த அனுமதி வழங்கலாம்: அதிகாரிகளுக்கு ஆணையர் குமரகுருபரன் உத்தரவு

சென்னை: கோயில்களில் போதுமான நிதி இல்லையெனில் மட்டுமே முதலீடுகளை பயன்படுத்த அனுமதி வழங்கலாம் என்று ஆணையர் குமரகுருபரன் மண்டல இணை ஆணையர்களுக்கு நிபந்தனையுடன் கூடிய அனுமதியை வழங்கி உத்தரவிட்டுள்ளார். இது குறித்து இந்து சமய அறநிலையத்துறை ஆணையர் குமரகுருபரன் அனைத்து மண்டல இணை ஆணையர்களுக்கு அனுப்பியுள்ள சுற்றறிக்கை அறநிலையத்துறை துறையின் ஆளுகைக்குட்பட்ட பட்டியலைச் சார்ந்த மற்றும் பட்டியலைச் சாராத கோயில்களில் நிதிபற்றாக்குறை ஏற்படும் போது கோயில்களில் உள்ள முதலீடுகளை முதிர்வு செய்வதற்கான அனுமதி வழங்கும் அதிகாரம் ஆணையருக்கு மட்டுமே வழங்கப்பட்டுள்ளது.

இந்து சமய அறநிலையக் கொடைகள் சட்டத்தின் சில பிரிவுகளின் கீழ் ஆணையருக்கு வழங்கப்பட்டுள்ள அதிகாரத்தினை சார்நிலை அலுவலர்களுக்கு சட்டப்பிரிவு 13 மற்றும் 14ன் கீழ் அதிகாரப்பகிர்வு வழங்கிட அனுமதி வழங்கப்பட்டுள்ளது. எனவே, அறநிறுவனங்கள் விதிகள் படி முதலீடுகளை முதிர்வு செய்வது தொடர்பாக அனுமதி வழங்கிட ஆணையருக்கு வழங்கப்பட்டுள்ள அதிகாரத்தினை, முதுநிலை அல்லாத கோயில்களுக்கு மட்டும் அனுமதி வழங்கிட மண்டல இணை ஆணையர்களுக்கு கீழ்காணும் நிபந்தனைகளுக்குட்பட்டு அதிகாரப்பகிர்வு வழங்கப்படுகிறது.

அதன்படி, வரவுசெலவுத்திட்டத்தில் அனுமதிக்கப்பட்ட இனங்களுக்கு செலவு செய்ய கோயிலின் கணக்கில் போதுமான நிதி இல்லையெணில் மட்டுமே. முதலீடுகள் முன்முதிர்வு/முதிர்வு செய்யப்பட அனுமதி வழங்கலாம். வரவு செலவுத்திட்டத்தில் அனுமதிக்கப்படாத, அத்தியாவசிய பணிகளுக்கு உரிய அலுவலர்களால் அனுமதி வழங்கப்பட்டிருப்பின். அந்தசெலவினத்தை மேற்கொள்ள வேறு நிதி ஆதாரம் இல்லையெனில் முதலீடுகள் முன்முதிர்வு, முதிர்வு செய்யப்பட அனுமதி வழங்கலாம்.

கோயில்களில் திருப்பணி மற்றும் மராமத்து பணிகளுக்கு நிர்வாக அனுமதி மற்றும் தொழில்நுட்ப அனுமதி உரிய அலுவலரிடம் பெற்று, மேற்கண்ட பணிகளை மேற்கொள்ள வேறு நிதி ஆதாரங்கள் இல்லையெனில், முதலீடுகள் முன்முதிர்வு/ முதிர்வு செய்யப்பட அனுமதி வழங்கலாம். பொதுநிதி முதலீடுகள் மட்டுமே முன்முதிர்வு, முதிர்வு செய்யப்பட வேண்டும். கோயில்களின் உபரிநிதி முதலீடுகளுக்கு மட்டுமே இந்த உத்தரவு பொருந்தும்.

Related Stories: